“இனி தாமதம் வேண்டாம்… உடனே பழங்குடியினச் சான்றிதழ் வேண்டும்!” – திருப்பத்தூரில் 1,500-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்!

“இனி தாமதம் வேண்டாம்… உடனே பழங்குடியினச் சான்றிதழ் வேண்டும்!” – திருப்பத்தூரில் 1,500-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஜி. குலசேகரன்,

திருப்பத்தூர்: குருமன்ஸ் பழங்குடியின மக்களுக்கு பழங்குடியினச் சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பத்தூரில் குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் சிவராஜ் லாட்ஜ் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்க பொதுச் செயலாளர் வீரபத்திரன் தலைமை வகித்தார். இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் டெல்லி பாபு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

குருமன்ஸ் மக்களுக்கு தொடர்ந்து பழங்குடியினச் சான்றிதழ் வழங்க வேண்டும், தமிழ்நாடு பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் பலமுறை ஆய்வு செய்து குருமன்ஸ் மக்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என அறிக்கை அளித்துள்ள நிலையில், மீண்டும் ஆய்வு என்ற பெயரில் காலதாமதம் செய்யாமல் தகுதியான அனைவருக்கும் உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பழங்குடியினச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், குருமன்ஸ் மக்களின் கலாசாரம், பாரம்பரியம், வாழ்வாதாரம் மற்றும் மானிடவியல் ஆய்வுகளின் அடிப்படையில் மாநில கூர்நோக்கு குழுவால் குருமன்ஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டவர்களின் ரத்த உறவினர்கள் மற்றும் நேரடி வாரிசுகளுக்கும் பழங்குடியினச் சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பெற்றோர் பழங்குடியினச் சான்றிதழ் பெற்றிருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கும் கல்வி உள்ளிட்ட அரசு சலுகைகளை பெறுவதற்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.