காவல் துறையினரை நன்றாக கவனிக்க வேண்டும்! 10 சதம் கூடுதல் ஊதியம்! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

காவல் துறையினரை நன்றாக கவனிக்க வேண்டும்! 10 சதம் கூடுதல் ஊதியம்! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
காவல் துறையினரை நன்றாக கவனிக்க வேண்டும்! 10 சதம் கூடுதல் ஊதியம்! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

 ஜி.எஸ்.மேத்யூராஜ்,

 சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல் துறை தொடர்பான பரபரப்பு தீர்ப்பு ஒன்று வெளியிடப்பட்டிருகிறது.

  அதில் மற்ற அரசு ஊழியர்களைவிட போலீஸாருக்கு கூடுதலாக 10% ஊதியம் வழங்கிடவும், காவல் துறையினரை நன்றாக கவனிக்கவும்,  8 மணி நேர வேலையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பதனையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

 இந்த வழக்கு குறித்த விவரம் வருமாறு,

தமிழக காவல்துறையில் போலீஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும், போலீஸாரின் ஊதியத்தை உயர்த்தவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி கரூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் மாசிலாமணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

  இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

  இந்நிலையில்,இந்த வழக்கில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோரைக் கொண்ட அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,

   போக்குவரத்து சந்திப்புகளில் ஒரு பத்து நிமிடம் போக்குவரத்து காவலர் இல்லாமல் இருந்தால் அங்கு நிலைமை என்னவாகும் என்பது அனைவருக்கும் தெரியும். சமூகத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதும் தெரிந்தது தான். மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்ய போலீஸாரின் சேவை அவசியம்.

  குற்றங்கள் அதிகரிக்கும் சூழலில் போலீஸாரின் பணி முக்கியமானதாக உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த போலீஸாருக்கு தமிழகத்தில் குறைவாகவே சம்பளம் வழங்கப்படுகிறது. போலீஸாரின் தேவை அவசியமாக இருக்கும் போது அவர்களை நன்றாக கவனிக்க வேண்டும்.

போலீஸாருக்கு சங்கம் வைக்க அனுமதி இல்லாத சூழலில், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வலுவான தீர்வு முறை தேவை. போலீ ஸார் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்றால் முறையாக பதவி உயர்வு மற் றும் பிற சலுகைகளை வழங்க வேண் டும். இவ்வாறு செய்தால் பதவி உயர்வு, சலுகைகளுக்காக அவர்கள் நீதிமன்றம் வரவேண்டிய தேவை இருக்காது.

அரசு ஊழியர்களுக்கு வாரத்துக்கு 2 நாள் விடுமுறை கிடைக்கிறது. போலீஸார் ஒருநாள் விடுமுறை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குடும்பத்தை கவனிக்காமல் ஒருநாள் கூட விடுமுறையில்லாமல் 24 மணி நேரமும் அவர்கள் பணிபுரிகின்றனர். இதுவே, போலீஸார் சில நேரங்களில் கோபத்துடன் பணிபுரிய காரணமாக உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் காவல் துறை பணியிலிருந்து 6,823 பேர் விலகி யுள்ளனர். வேலை கிடைப்பது கடின மாக இருக்கும் சூழலில் காவல்துறை பணியிலிருந்து விலகுகிறார்கள் என்றால்  மனஅழுத்தம், மன உளைச்சல் இருப்பது நிரூபணமாகிறது. இதைத் தடுக்க தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.

 தமிழகத்தில் காவல் துறையில் மனஅழுத்தம், மனஉளைச்சல் மற்றும் பிற காரணங்களால் 2011-ல் 31 பேரும், 2020-ல் 25 பேரும் தற்கொலை செய்துள்ளனர். உடல் நலக்குறைவால் 2011-ல் 217 பேரும், 2020-ல் 200 பேரும் உயிரிழந்துள்ள னர். இது போலீஸார் உடல்நலனில் அக்கறையில்லாமல் இருப்பதை காட்டுகிறது. அவர்களின் உடல்நலனை மேம்படுத்த மருத்துவ விடுப்பு, உரிய சிகிச்சைக்கு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

காவலர் முதல் சிறப்பு காவல் ஆய் வாளர் வரை 16 சதவீத பணியிடங் கள், அதாவது 15,819 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங் களை நிரப்பவும், எதிர்காலத்தில் காலியிடங்கள் ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது 563 பேருக்கு ஒரு காவலர் என்ற விகிதத்தில் பொதுமக்கள் - போலீஸ் எண்ணிக்கை உள்ளது. குற்றங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப போலீஸாரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

பணியின்போது போலீஸார் உயிரிழந்தால் தற்போது ரூ.15 லட்சமும், முழுமையாக ஊனம் அடைந்தால் ரூ.8 லட்சமும் வழங்கப்படுகிறது. இதை முறையே ரூ.25 லட்சம், ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும். அதேபோல ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை உள்ள போலீஸ் காப்பீட்டு திட்டத் தொகையை ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை உயர்த்த வேண்டும்.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கொண்ட ஆணையம்

தமிழகத்தில் போலீஸாரின் குறைகளை கேட்கவும், நிவர்த்தி செய்யவும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட போலீஸ் ஆணையம் அமைக்க வேண்டும் என 2012-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதற்கு பதிலாக 2019-ல் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் போலீஸ் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் உயர் நீதிமன்ற தீர்ப்பில் கூறியபடி அமைக்கப்படவில்லை. எனவே, 3 மாதத்தில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் போலீஸ் ஆணையம் அமைக்க வேண்டும்.

 சைபர் கிரைம் உள்பட பல்வேறு புதுவிதமான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையை நவீனமயமாக்க வேண்டும். இதற்கேற்ப பல்வேறு துறைகளில் தகுதி பெற்றவர்களை காவல் துறைக்கு தேர்வு செய்ய வேண்டும். காவல்துறையை நவீனமயமாக்க தேவையான உபகரணங்களை வாங்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

10 சதவீதம் கூடுதல் ஊதியம்

காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், போலீஸார் மன அழுத்தம், மனஉளைச்சலுடன் பணி செய்து வருகின்றனர். இதனால், போலீஸாருக்கு பிற அரசு ஊழியர்களைக் காட்டிலும் 10 சதவீதம் கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

போலீஸ் பணி மகத்தான பணியாகும். இப்பணியை வேறு பணிகளுடன் ஒப்பிட முடியாது. இதனால், போலீஸாருக்கு குறைந்தபட்சம் 10 சதவீத கூடுதல் ஊதியம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்.

 24 மணி நேரம் பணி

 போலீஸாருக்கு 8 மணி நேர வேலை என்கிறார்கள். ஆனால், 24 மணி நேரம் பணிபுரிகின்றனர். இனிவரும் காலங்களில் 8 மணி நேர வேலை முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதன்படி, 3 ஷிப்ட் அடிப்படையில் போலீஸார் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

 தமிழக போலீஸார் சிறப்பாக பணிபுரிய இந்த ஒருங்கிணைந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதை நிறைவேற்றினால் மட்டுமே சிறந்த காவலர்களை எதிர்பார்க்க முடியும்  நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளார்கள்.

காவல் துறை மான்ய கோரிக்கை சமயத்தில் இந்த பரபரப்பான தீர்ப்பு வெளியாகி போலிசாரை தெம்பாக்கியுள்ளது.