மின் வயர்களுக்கு இடையே அனுமதி தந்தது யார்? மாநகராட்சி எதிரில் கழிவுநீர் கால்வாயிலேயே ராட்சத விளம்பரப் பலகை! வரலாற்றையும் சமாதியையும் விடவில்லை!

மின் வயர்களுக்கு இடையே அனுமதி தந்தது யார்? மாநகராட்சி எதிரில் கழிவுநீர் கால்வாயிலேயே ராட்சத விளம்பரப் பலகை! வரலாற்றையும் சமாதியையும் விடவில்லை!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

வேலூர் மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் விதம் குறித்து தற்போது பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தின் வாசலுக்கு எதிரே உள்ள கழிவுநீர் கால்வாயில் ராட்சத அளவிலான விளம்பரப் பலகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதது.

பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கியமான பகுதியில், கழிவுநீர் கால்வாயிலேயே இவ்வாறு மிகப்பெரிய விளம்பரப் பலகை அமைக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்கான இடங்களில் இத்தகைய ராட்சத விளம்பரப் பலகைகளை அமைக்க எந்த விதிமுறையின் கீழ் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சீனிவாசன் நகர் முகப்பில் ஆபத்தான விளம்பரப் பலகை!

இதேபோல், வேலூர் மக்கான் பகுதியில் உள்ள சீனிவாசன் நகர் முகப்பில் ராட்சத அளவிலான விளம்பரப் பலகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்த விளம்பரப் பலகை அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் நியாய விலைக் கடை, குடியிருப்பு வீடுகள், கார் நிறுத்துமிடம் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளது.

அதேபோல் உயர் அழுத்த மின் ஒயர்கள் அங்கு சரளமாக செல்கிறது.

 அந்த பகுதியில் பொதுமக்கள் தொடர்ந்து நடமாடும் நிலையில், மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை பாதுகாப்பான முறையில் நிறுவப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக, அந்த விளம்பரப் பலகை சாலையோரப் பகுதியில் ஆபத்தான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று, மழை போன்ற இயற்கைச் சூழ்நிலைகளில் அது சாய்வதற்கோ, கீழே விழுவதற்கோ வாய்ப்பு உள்ளது.

மேலும், விளம்பரப் பலகையின் அளவு, அது அமைக்கப்பட்டுள்ள இடம், பொதுமக்கள் நடமாட்டம், வாகனங்கள் நிறுத்தப்படும் பகுதி மற்றும் அருகில் செயல்படும் நியாய விலைக் கடை ஆகியவற்றுக்கு வரும் மக்களின் பாதுகாப்பு குறித்து யாருமே கவலைப்படவில்லை.

நினைவிடங்களுக்குள்ளும் விளம்பரமா?

ஏற்கனவே, விருதம்பட்டு பகுதியில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி. மூர்த்தி அவர்களின் நினைவிட வளாகத்திலும், மக்கான் அம்பேத்கர் நகர்–சீனிவாசன் நகர் பகுதியில் மறைந்த முன்னாள் கவுன்சிலர் எல். சுப்பிரமணி (எல்.எஸ்.) அவர்களின் நினைவிட வளாகத்திலும் விளம்பரப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளது.

ஒருபுறம் மறைந்த மக்கள் பிரதிநிதிகளின் நினைவிடங்களின் கண்ணியம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

இந்த நிலையில், மறுபுறம் மாநகராட்சி அலுவலகம் எதிரே கழிவுநீர் கால்வாயிலும், மக்கள் அதிகம் பயன்படுத்தும் குடியிருப்பு பகுதியிலும் ராட்சத விளம்பரப் பலகைகள் அமைக்கப்பட்டிருப்பது, வேலூரில் விளம்பர அனுமதிகள் வழங்கப்படும் நடைமுறை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வார்களா?

இதுதொடர்பாக வேலூர் பிலிப் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்த நிலையில், அந்த மனு சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து சம்பந்தப்பட்ட இடங்களில் நேரில் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பரப் பலகை, சீனிவாசன் நகர் முகப்பில் ரேஷன் கடை, குடியிருப்புகள், கார் நிறுத்துமிடம் மற்றும் கடைகள் அருகே அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை ஆகியவை விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

விதிமுறைகளுக்கு முரணாகவோ, பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலோ அமைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், அவற்றை உடனடியாக அகற்றுவதுடன், அனுமதி வழங்கப்பட்ட விதம் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதேபோல பாலாற்றின் குறுக்கே உள்ள இரண்டு பாலங்களிலும் ஆற்றில் டிஜிட்டல் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. 

அதை வைத்துள்ளவர்கள் நொடிக்கும் நிமிடத்திற்கும் கணக்கு போட்டு நிறுவனங்களிடம் விளம்பர கட்டணம் வசூல் செய்து கொளுத்து வரும் நிலையில் மாநகராட்சிக்கு பட்டை நாம் போட்டு வருகிறார்கள். 

இதை நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க ஆணையாளர் அவர்கள் உத்தரவிடுவார் என்று பொதுமக்கள் நம்புகின்றனர். 

அதேபோல் இந்த பேனர்களை வைப்பதினால் பல கோடி ரூபாய் வருமான இழப்பு அரசுக்கு ஏற்படுகிறது என்பது நினைவு கூறத்தக்கதாகும். 

முந்தைய ஆட்சியாளர்கள் இதை இன்னுமும் முறைகேடாக அனுபவித்து வருவது கால  கொடுமை.