மாணவனை காவல் நிலையம் அழைத்து வந்து... விடுவிக்க ₹10 ஆயிரம் லஞ்சமா? சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் – திருப்பத்தூர் எஸ்.பி. அதிரடி நடவடிக்கை
செய்தி: ம.பா. கெஜராஜ்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, பொதுவழி தொடர்பான தகராறு வழக்கில் தாய் இல்லாத நேரத்தில் அவரது பிளஸ்-2 மாணவரான மகனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில், உமராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆம்பூர் அடுத்த கதவாளம் ஊராட்சிக்குட்பட்ட ராமாபுரம் பகுதியில் பொதுவழி பயன்பாடு தொடர்பாக மார்க்கபந்து மற்றும் மணிமேகலை ஆகியோரது குடும்பத்தினரிடையே தகராறு இருந்து வந்தது.
பின்னர் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இருதரப்பினரும் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மணிமேகலை அங்கு இல்லாத நிலையில், அவரது மகனான பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இங்குதான் காவல்துறையின் செயல்பாடு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
தகராறு தொடர்பான விசாரணைக்காக மாணவனை காவல் நிலையம் அழைத்துச் சென்றதே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த மாணவனை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகனை ஆயுதப்படைக்கு மாற்றி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாக்ரே விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்புக்கும், சட்டத்தின் மீதான நம்பிக்கைக்கும் காவல்துறையினர் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நிலை உள்ளது.
அப்படி இருக்க,பள்ளி மாணவனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தது தொடர்பான சர்ச்சையைவிட, அவரை விடுவிக்க பணம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டு காவல்துறையின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin
