யூதர்களை குறிவைத்துக் கொல்லும் தீவிரவாத அமைப்புகள்!
ம.பா.கெஜராஜ்,
யூதர்களின் ரத்த வரலாற்றை உலகறியும். அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் உயிருக்கு கியாரண்டி கிடையாது.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 11 யூதர்கள் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்தார்.
இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள ஆலயத்தை மீண்டும் உயிப்பிப்பதைக் குறிக்கும் வகையில், 'ஹனுக்கா' திருவிழாவை யூதர்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர். அந்த வகையில், ஒரு வாரம் நடைபெறும் ஹனுக்கா திருவிழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான யூதர்கள் கூடியிருந்தனர்.
இந்நிலையில், மாலை 6.40 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். போலீஸார் விரைந்து சென்று, மர்ம நபர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.
இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு நபர் படுகாயங்களுடன் பிடிபட்டார்.
மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 29 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடற்கரையில் உள்ள வாகன நிறுத்தப் பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். அங்கு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாத தாக்குதலில் உயிர் தப்பிய ஒருவர், ஹனுக்கா திருவிழாவை கொண்டாட குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார். நேற்றைய தாக்குதலில் அவரும் காயமடைந்தார்.
தீவிரவாத தாக்குதல் நடந்தபோது, பொதுமக்களில் ஒருவர் தைரியமாக ஓடிச் சென்று ஒரு தீவிரவாதியைப் பிடித்து துப்பாக்கியைப் பறித்தார். எனினும் மற்றொரு தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டதில் அவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அகமது எல் அகமது (43) என்ற பழ வியாபாரி என்று தெரியவந்துள்ளது.

admin
