ஸ்கார்பியோவில் பட்டாக்கத்திகள்... 7 பேர் கைது! 2 கி.மீ. துரத்திச் சென்று காரை மடக்கிய கந்திலி போலீஸ் – கஞ்சா மோதலில் தப்பியோட்டம்?

ஸ்கார்பியோவில் பட்டாக்கத்திகள்... 7 பேர் கைது! 2 கி.மீ. துரத்திச் சென்று காரை மடக்கிய கந்திலி போலீஸ் – கஞ்சா மோதலில் தப்பியோட்டம்?

செய்திஜி.குலசேகரன்,

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பனந்தோப்பு பகுதியில் கந்திலி போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஸ்கார்பியோ காரை போலீசார் சோதனைக்காக நிறுத்த முயன்றனர்.

ஆனால், காரில் இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் காரை நிறுத்தாமல் அதிவேகமாக ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் அந்த காரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் காரை சோதனை செய்தபோது, அதில் 7 வாலிபர்கள் இருந்ததுடன், 10-க்கும் மேற்பட்ட பட்டாக்கத்திகள் மற்றும் இரும்பு ராடுகள் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் 7 பேரையும் கந்திலி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு இந்திரா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவரை தாக்கிவிட்டு, அங்கிருந்து ஸ்கார்பியோ காரில் தப்பி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பெங்களூரு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மாது மகன் கணேஷ் (19), அன்பு மகன் ரஞ்சித் (25), அப்பு மகன் பிரவீன் (25), மைக்கல் மகன் அந்தோனிராஜ் (25), ஜோசப் மகன் சாலமன் (23), நாகப்பன் மகன் அப்பு (23), காளி மகன் உஸ்மான் (25) ஆகிய 7 பேரையும் கந்திலி போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து பட்டாக்கத்திகள் மற்றும் இரும்பு ராடுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வாகன சோதனையின்போது பட்டாக்கத்திகள் மற்றும் இரும்பு ராடுகளுடன் ஸ்கார்பியோவில் சென்ற 7 பேர் பிடிபட்ட சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.