அரசு ஊழியர்களுக்கு இன்னும் 3 மாதங்களில் இனிப்போ இனிப்பு!!

ம.பா.கெஜராஜ்,
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் என்.முருகானந்தம் ஐஏஎஸ் சற்றுமுன் வெளியிட்டுள்ள அரசாணையில், ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை முன்கூட்டியே அமல்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசின் நிதிநிலை மீது பெரும் சுமை ஏற்பட்டது. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு செய்யும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை மீண்டும் அமல்படுத்தக் கோரி அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 2025-26ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, 01.04.2026 முதல் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெற்றுக் கொள்ளலாம்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை நடப்பாண்டே செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதுதொடர்பாக அரசு ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை 01.10.2025 முதல் சரண் செய்து பணப்பலன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு விஷயத்தையும் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஏப்ரல் 1, 2020 அன்று 15 நாட்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன்களை பெற்றவர்கள் வரும் ஏப்ரல் 1, 2026 அன்று மீண்டும் சரண்டர் செய்ய தகுதி படைத்தவர்கள்.
அக்டோபர் 15, 2019 அன்று 15 நாட்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன்கள் பெற்றிருந்தால் அக்டோபர் 15, 2025 அன்று மீண்டும் சரண்டர் செய்யலாம். இந்த உத்தரவு மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள், ஆணையங்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சொசைட்டிகள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.
தமிழ்நாடு விடுப்பு விதிமுறைகள் 1933 பிரிவு 7ஏ-வில் உரிய திருத்தங்கள் செய்து பின்னர் வெளியிடப்படும் என்று தலைமை செயலாளர் என்.முருகானந்தம் ஐஏஎஸ் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு பள்ளி ஆசிரியர்களிடம் கேட்கையில், கொரோனாவிற்கு பின்னர் ஈட்டிய விடுப்பு சரண் செய்வதை நிறுத்தி வைத்திருந்தனர். இது பெரிதும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. தற்போது மீண்டும் அமல்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஓராண்டில் 17 நாட்கள் ஈட்டிய விடுப்பு என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் 15 நாட்களுக்கு மட்டும் பணப்பலன்களை பெற முடியும்.