பெண்களை தாக்கிய திமுக பிரமுகர் மீது வழக்கு பதியாத எஸ்.ஐ. சலாம் உசேன்!!

பெண்களை தாக்கிய திமுக பிரமுகர் மீது வழக்கு பதியாத எஸ்.ஐ. சலாம் உசேன்!!

 ம.பா.கெஜராஜ்,

  நிலம் தொடர்பான பிரச்சனையில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த திமுக பிரமுகர் மீது வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் புகார்தாரரை திமுக பிரமுகர் தாக்கியிருக்கிறார்.

  தாக்கப்பட்ட பெண் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு போலீசாரால் வாக்கு மூலம் எடுக்கப்பட்டும் இதுவரை வழக்கு பதியவில்லை.

 இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் வடக்குமண்டல காவல் அதிகாரிக்கு புகார் தெரிவித்துவிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பி காத்திருக்கிறார்.

  புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

   வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அவர்களுக்கு பணிவான வணக்கம்.

என் பெயர் சாய்ராமா, என் கணவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம்வடபொன் பரப்பி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உலகளப்பாடி கிராமத்தில் எனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலமும், அதில் வீடும் உள்ளது.

இந்த இடத்தை அபகரிப்பதற்காக அப்பகுதியில் உள்ள ரஃபிக் கான் என்பவர் எங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்.

 நாங்கள் இது தொடர்பாக சட்டரீதியாக அணுகி உள்ள நிலையில்  கடந்த 15.10.2025 ஆம் தேதி  நாங்கள் வெளியில் சென்று இருந்ததை நோட்டமிட்ட ரஃபீக் கான் அவருடன்  நான்கு நபர்களை அழைத்துக் கொண்டு வந்து எங்கள்  நிலத்தில் பணிபுரிபவர்களை மிரட்டி அங்கிருந்து விரட்டி உள்ளனர்.

 இதுகுறித்து தகவல் அறிந்த நான் உடனடியாக வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகாரின் பேரில் சி. எஸ். ஆர் வழங்கப்பட்டிருக்கிறது.

 இதனால்  ஆத்திரம் அடைந்த மேற்படி குற்றம் புரிந்த ரஃபீக் கான் என் மீதே போலீசில் புகார் கொடுக்கிறாயா என்று என்னையும் எனது மகள் ஆயிஷாவையும் முகத்தில் அடித்ததுடன் நெஞ்சுப் பகுதியில் கையால் குத்தினார். இதனால் நான் மயங்கி கீழே விழுந்தேன்.

  உடனடியாக  ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

போலீசுக்கு தகவல் தெரிந்தவுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த பெண் காவலர் ஒருவர் என்னிடம் ஸ்டேட்மென்ட் பெற்றார். அதை வீடியோ எடுத்து பதிவு செய்து கொண்டார்.

 ஆனாலும் இதுவரை என் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

 ரஃபிக் கான் என்பவரால் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். ஆகவே தயவு கூர்ந்து அய்யா அவர்கள் வடபொன்பரப்பி காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டு என் புகார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி வேண்டுகிறேன்.நன்றி வணக்கம். என்று தெரிவித்துள்ளார்.

  இது குறித்து மேலும் விவரம் அறிய பாதிக்கப்பட்ட பெண் சாயிராமா அவர்களிடம் பேசினோம். அதில் வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் உள்ள சலாம் உசேன் என்கிற எஸ்.ஐ ரஃபிக்கானுக்கு ஆதரவாக செயல்பட்டு என் புகாரின் மீது வழக்கு பதிய மறுக்கிறார்.

  இது குறித்து காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தவுடன் என் புகார் மீது வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளார். ரஃபிக்கான் என்னை பெண் என்றும் பாராமல் தாக்கினார். இதனால் எனக்கு உடல்பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது  என்றார்.