முக்கிய சாலைகளில் தண்ணீருக்காக சாலை மறியல்!

 முக்கிய சாலைகளில் தண்ணீருக்காக சாலை மறியல்!

ஜி.கே.சேகரன்,

 ஆம்பூர் அருகே பல நாட்களாக தண்ணீர் வராததால் சம்மந்தப்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மேல் சாணங்குப்பம் பகுதியில் இரண்டாவது வார்டில் சுமார் மூன்று மாதத்திற்கு மேலாக சரியான முறையில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

  அப்படியிருக்க ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து இன்று காலி குடங்களுடன்  ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டும் தண்ணீர் வழங்காத ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  இந்த சாலை மறியலில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால் வாணியம்பாடி உமராபாத் ஆம்பூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

 அதே போல்  முள்ளிப்பாளையம் கேகே நகர் பகுதி மக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சாலைமறியல் செய்தனர்.

  வேலூர்மாவட்டம்,வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட முள்ளிப்பாளையம் கேகே நகர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்குவதில்லை தெருவிளக்குகளும் எரிவதில்லை கழிவுநீர் கால்வாய்களும் அமைக்கபடாததால் தூர் நாற்றம் வீசுவதுடன் கழிவு நீர் வீடுகளின் வெளியே நிற்பதால் நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

  இதுகுறித்து பல முறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கேகே நகர் பகுதி மக்கள் சாலைகளின் நடுவே மாட்டு வண்டிகளை நிறுத்தி குடிநீர் கேட்டும் அடிப்படை வசதிகளை செய்து தர கோரினர்.

  சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பின்னர் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வேலூர் வட்டாட்சியர் வடிவேல் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து முள்ளிப்பாளையம் பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.