ஆற்காட்டில் பெருகும் கஞ்சா புழக்கம்! வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை? சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை போதைக்கு அடிமையாவதாக ஆட்சியரிடம் மனு!
செய்தி: கு.அசோக்,
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரப் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சமூக ஆர்வலர் அருண், மாவட்ட ஆட்சியர் பிரியாவிடம் மனு அளித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட அந்த மனுவில், ஆற்காடு நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 12 வயது சிறுவர்கள் முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு பழக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அவர்களது கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் பயன்பாட்டின் காரணமாக சில இளைஞர்கள் சிறு குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாகவும், இதனால் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆற்காடு நகரில் ஒதுக்குப்புறமான பகுதிகள், பூங்காக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து காவல்துறை தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ரகசியக் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், போதைக்கு அடிமையாகியுள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தேவையான ஆலோசனை, விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் அருண் கேட்டுக்கொண்டுள்ளார்.
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து உடனடி நடவடிக்கை எடுக்குமா? என்பதே தற்போது ஆற்காடு பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ராணிப்பேட்டை ஆட்சியர், கஞ்சா புழக்கம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

admin
