அரசுக்கு எதிராக பதட்டத்தை ஏற்படுத்த அரசியல் செயல் திட்டம்! பாஜக முன்னெடுத்திருப்பதாக திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு!

அரசுக்கு எதிராக பதட்டத்தை ஏற்படுத்த அரசியல் செயல் திட்டம்! பாஜக முன்னெடுத்திருப்பதாக திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு!

ம.பா.கெஜராஜ்,

  இங்கு அரசுக்கு எதிராக பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக அரசியல் செயல் திட்டதை முன்னெடுத்திருக்கிறது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பரபரப்பு பேட்டியளித்திருக்கிறார்.

  இன்று விசிக தலைவர் திருமாவளவன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, திட்டமிட்டவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியுள்ளோம்.

  தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என சில அரசியல் கட்சிகள், சில அமைப்புகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜகவுக்கு இந்த செயல்திட்டம் இருப்பதை அறிய முடிகிறது.

  குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் செயல் திட்டம் இருப்பதாக விசிக சந்தேகிக்கிறது. அவர் உயிரிழந்த சில நிமிடங்களில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தான் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் வைத்த கோரிக்கை தான் சிபிஐ விசாரணை. காவல்துறை நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாகவே, பகுஜன் சமாஜ் கோரிக்கை வைக்கும் முன்னதாகவே தமிழக அரசு விசாரிக்கக்கூடாது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பது பாஜகவின் குரலாக இருந்தது.  அதுவே பாஜக மாநிலத் தலைவரின் குரலாகவும் அடுத்து ஒலித்தது.

  ஆருத்ரா கோல்டு நிறுவனத்துடன் பாஜகவை சேர்ந்த சிலருக்கு உள்ள தொடர்பு குறித்து கடந்த சில மாதங்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பாஜகவில் பொறுப்பிலேயே இருக்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜக வலிய வந்து சிபிஐ விசாரணை கேட்கிறது.

  அவர்களின் அரசியல் செயல்திட்டம் என்பது திமுக அரசுக்கு எதிராக இங்கு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது.

  அதற்குத் துணையாக பல அமைப்புகள் இங்கு செயல்பட்டு வருவதை காண முடிகிறது. இது தொடர்பாக காவல் ஆணையரைச் சந்தித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்த வலியுறுத்தினோம். முன்னாள் முதல்வர் கருணாநிதியை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அரசியல் அநாகரிகத்தின் உச்சமாக இருக்கிறது. தனிப்பட்ட அல்லது அரசியல் விமர்சனங்களை நாகரிகமாக வைக்கலாம். ஆனால் அவரை கொச்சைப்படுத்துவதன் மூலம் மேலும் பதற்றத்தை உருவாக்குவதே அவர்கள் நோக்கம் என்பதை உணர முடிகிறது.

 அரசியல் திட்டங்களை வரையறுத்து கொண்டு சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க சில சக்திகள் செயல்பட்டு வருவதை அறிந்து, சட்டம் - ஒழுங்கை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்கிறோம். சட்டம் - ஒழுங்கை சீர்குலைப்போருக்கு அடைக்கலம் தருவோரை கண்காணித்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

 திமுக கூட்டணியில் இருந்து நாங்கள் முன்னெடுத்த போராட்டங்களை எந்தக் கட்சியும் எடுத்திருக்காது. அதை பாராட்ட மனமில்லாதவர்கள் விமர்சிக்கின்றனர்.

  கூட்டணியில் இருந்து கொண்டே போராட்டம் நடத்துவதால் திமுகவினருக்கே எங்கள் மீது வருத்தமுண்டு. பாஜக ஆளும் மாநிலங்களில் பட்டியலினத்தவர்கள் பாதுகாப்பாக உள்ளனரா? நாடு முழுவதும் பட்டியலினத்தவர்கள் காலம் காலமாக பாதிக்கப்படுவது நிதர்சனமான உண்மை. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடாமல் அரசியல் செய்கின்றனர்." என்று திருமாவளவன் சொன்னார்.