ராணிப்பேட்டை மாவட்ட நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
செய்தி: கு. அசோக்,
தமிழகத்தில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ வெங்காயம் ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், பொதுமக்கள் மலிவு விலையில் வெங்காயம் வாங்கி பயன்பெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சுமார் 20 மெட்ரிக் டன் வெங்காயம் வரவழைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு அட்டைக்கு தலா ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சி ராணிப்பேட்டை அடுத்த பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் பொதுமக்களுக்கு வெங்காயத்தை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

admin
