வறண்டு போன அணை...வானத்தை நோக்கி கதறும் ஏரி பூமி!

வறண்டு போன அணை...வானத்தை நோக்கி கதறும் ஏரி பூமி!

கு.அசோக்,

வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டு கோடைகால வெப்பத்தினால் வற்றிப்போனதால், அதனை நம்பியிருந்த காவேரி பாக்கம் ஏரி காய்ந்து ஏரியின் பூமி வானத்தைப் பார்த்து கதறிக்கொண்டிருக்கிறது.

 இதனைக்கண்டு விவசாயிகள் பெரும் வேதனை அடைந்திருக்கிறார்கள்.

 இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே வாலாஜா வழியாக செல்லும் பாலாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட அணைக்கட்டை மையப்படுத்தி பல ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

 ஆனால் தற்போது கடுமையான வெப்பம் மற்றும் பாலாற்று அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் அணை வறண்டு போய் காணப்படுகிறது. மேலும் இதனால் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

 மேற்படி பாலாற்றின் குறுக்கே 1854- ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் அணை கட்டுமான பணி தொடங்கப்பட்து. அணையின் நீளம் 799 மீட்டர். 4,825.2 கன அடி வெள்ள நீரை தேக்கும் அளவுக்கு திறனுடையது.

 பின்னர்  1858-ல் கட்டுமான பணி முழுமையாக முடிவடைந்து, பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்டது.

  குறிப்பாக இந்த அணை கட்டுமான பணி முடிந்த பிறகு பாசன பரப்பளவு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து பாலாறு அணைக்கட்டால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 14,309 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுள்ளது.

 இதில் பாலாற்று அணைக்கட்டின் உபரி நீரை கால்வாய் வழியாக ஓடவிட்டு காவேரிப்பாக்கம் ஏரியை நிரப்பும் வகையில் ஆங்கிலேயர்கள் இந்த அணையினை வடிவமைத்தனர்.

  பாலாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது கால்வாய் வழியாக உபரி நீர் எடுத்து செல்லப்பட்டு காவேரிப்பாக்கம் ஏரியில் சேர்க்கும்.இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிரம்மாண்ட ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி மூன்றாம் நந்திவர்மனால், பல்லவன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.

 அதில் ஏரியின் முழு கொள்ளளவை எட்டியதும், உபரி நீர் மகேந்திரவாடிக்கு அனுப்பப்படும், பின்னர் , பனப்பாக்கம், நெமிலி, தக்கோலம் வழியாக குசஸ்தலை ஆற்றில் ஓடி பூண்டி ஏரியில் சேரும்.

  மேலும், அணையின் தெற்கில் கிடைக்கின்ற உபரி நீர் இரண்டாக பிரித்து காஞ்சிபுரம் மாவட்டம் தூசி வழியாக பாலாற்றின் கிளை நதியான செய்யாறு ஆற்றுடன் இணைத்தனர்.  மற்றொரு சிறிய கால்வாய் வழியாக சக்கரமல்லூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் வடிவமைத்து உள்ளார்கள்.

 இந்நிலையில் தற்போது ஏரியின் 54 மதகுகளும் காய்து கிடக்கிறது. இதனால் விவசாயிகள் விரக்தியடைந்திருக்கிறார்கள்.

 இது இயற்கையின் மாற்றம் என்றாலும் கூட விவசாயத்தை காக்க வேண்டிய பொறுப்பு அரசின் கடமை. இது கோடைகாலம் என்பதை வேளாண் அலுவலர்கள் கவனித்தில் கொண்டு விவசாயிகளுக்கு பரிகாரம் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசின் பார்வைக்கு இவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.