தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?

ம.பா.கெஜராஜ்,

  தமிழ்நாட்டின் டிஜிபி யாக உள்ள சங்கர் ஜிவால் அடுத்த மாதம் பணி ஓய்வு பெறும் நிலையில் அடுத்த டிஜிபி யார் என்று காவல்துறை வட்டாரத்திலும் மட்டுமல்லாமல் அரசியல் அரங்கிலும் காரசாரமாக பேசிவருகிறார்கள்.

  சட்டம் - ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள்

புதிய டிஜிபிஆக நியமிக்கப்படுபவருக்கு குறைந்தபட்சம் அடுத்து இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்க வேண்டும்.

மத்திய பணியாளர் தேர்வாணையத்துடன் மாநில அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும்.

தகுதி அடிப்படையிலான செயல்முறையாக இருக்க வேண்டும்.

  மாநில அரசு பட்டியலை 3 மாதங்களுக்கு முன்பாக தயாரித்து யுபிஎஸ்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி தான் புதிய டிஜிபி நியமிக்க முடியும் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி தான் இதற்கு முன்பு டிஜிபிக்கள் நியமிக்கப்பட்டனர்.

  அப்படியிருக்க தற்போதைய தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்து விட்டது. ஆனால் அவர் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதால் அதுவரை அந்த பதவியில் நீடிப்பார், அதற்குள் புதிய டிஜிபி தேர்வு செய்யப்பட உள்ளார்.

  உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அந்த வழிகாட்டு நெறிமுறைகளின் படி 30 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள 5 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பட்டியலப்பட்டுள்ளது. அந்த பட்டியல் மூன்று மாதங்களுக்கு முன்பாக யுபிஎஸ்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

  அந்த வகையில் கடந்த மே மாதமே இந்த பட்டியல் யு பி எஸ் சி க்கு சென்று இருக்க வேண்டும். ஆனால் அப்படியான எந்த பட்டியலையும் தமிழ்நாடு அரசு அனுப்பவில்லை என்கிறார்கள்.

   இது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகிவருகின்றன.

 ஐபிஎஸ் அதிகாரிகளின் சீனியாரிட்டி படி பார்க்கும்போது சீமா அகர்வால், ராஜிவ்குமார், சந்திப்ராய் ரத்தோர், அபய் குமார், வன்னிய பெருமாள் ஆகிய ஐந்து அதிகாரிகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியல் தான் யுபிஎஸ்சிக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.

   இந்த பட்டியலில் இருந்து மூன்று பேரை யுபிஎஸ்சி தேர்வு செய்து மாநில அரசுக்கு அனுப்பும். அவர்களில் ஒருவரை முதலமைச்சர் தேர்வு செய்ய அதிகாரம் உண்டு. இந்த ஐந்து பேரில் இருந்து தான் ஒருவர் தமிழ்நாடு டிஜிபியாக வர உள்ளதாக கூறப்படும் நிலையில் ஏன் இந்த தாமதம் என்று விசாரிக்கும் போது முக்கிய தகவல் ஒன்றை கூறுகின்றனர்.

  முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருக்கு நெருக்கமாக இருக்கும் அதிகாரிகளுக்கு தோதான ஒருவர் டிஜிபி யாக நியமிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த ஐந்து பேர் பட்டியலில் உள்ளவர்கள் முக்கியஸ்தருக்கு  நெருக்கமான அதிகாரிகளுக்கு தோதானவர்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

   அப்படியிருக்க புதிய டிஜிபி தேர்வு செய்யப்படாத நிலையில் சங்கர் ஜீவாலே இடைக்கால டிஜிபி ஆக தொடர வாய்ப்புள்ளது. அதே சமயம் இடைக்கால டிஜிபியாக ஒருவரை கொண்டு வருவதற்கு உச்ச நீதிமன்றம் விருப்பம் தெரிவிக்கவில்லை.

   தமிழ்நாடு அரசு பொறுப்பு டிஜிபியாக ஒருவரை நியமித்தால், தேர்தல் நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையமே அவரை மாற்றி விட்டு தேர்தல் கால டிஜிபியாக வேறொருவரை நியமிக்க வாய்ப்புள்ளது எனது திமுக அரசு அதையும் மனதில் வைத்து விரைவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று கூறப்படுகிறது.