கானாற்றின் கரையை உடைத்த பாலம் காண்டிராக்டர்! காப்பாற்ற கோரி கலெக்டரிடம் மனு! நடவடிக்கை எடுக்கப்படுமா?!

கானாற்றின் கரையை உடைத்த பாலம் காண்டிராக்டர்! காப்பாற்ற கோரி கலெக்டரிடம் மனு! நடவடிக்கை எடுக்கப்படுமா?!

ஜி.கே.சேகரன்,

   பாலம் கட்டுமான பணி செய்பவர்கள் கானாற்று கரையை உடைத்து விட்டதால் சிறு தொழிற் கூடங்கள் உள்ள பகுதியில் தண்ணீர் புகுந்து வருகிறது. இதனால் கடந்த பத்து நாட்களாக தொழில் செய்ய முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டுவருகிறார்கள் -  அது குறித்து ஆட்சியர் பார்வைக்கு தெரிவித்து உடைக்கப்பட்ட கானாற்று கரையை மீண்டும் அமைத்து தரக் கோரி மனு ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது.

  தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில் வேலூர் மாவட்ட செயலாளர் எச்.ஷரிப்பாஷா அந்த மனுவை அளித்தார். உடன் மாநில செயலாளர் தமீம்மரைக்காயர், மற்றும் பாதிக்கப்பட்ட சிறுதொழில் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் சென்றனர்.

  அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது.

    வேலூர் அகழி அருகில் உள்ள இரயில்வே கேட்டுக்கு பக்கத்தில் கிருஷ்ணா கார்டன் என்கிற பகுதியில் சிறு சிறு தொழிற் கூடங்கள் உள்ளன. அங்கு மரச்சாமான்கள் செய்வது, காயலான்கடை போன்றவை செயல்படுகின்றன, இந்நிலையில் சமீபகாலமாக அங்கு இரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தன. 

    அப்பணியை செய்பவர்கள், அருகில் உள்ள கானாற்றின் கரையை உடைத்து வைத்திருக்கிறார்கள். தற்போது மழைகாலம் என்பதால் கானாற்றில் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

   கானாற்றில் பாயும் வெள்ள நீர், கரை உடைக்கப்பட்ட வழியாக கிருஷ்ணாகார்டன் பகுதிக்குள் புகுந்து வெளியேற வழியில்லாம் குளம் போல் தேங்கி உள்ளது. இதன்காரணமாக அங்கு குடிசைத்தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகி சுமார் 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுவருகிறது.

  பொருட்கள் செய்வதற்காக வாடிக்கையாளர்களிடம் வாங்கி வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரச்சாமன்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் சேதமடைந்துவிட்டது.

   மேலும் அங்கு குளம் போல் தேங்கியிருக்கும் கானாற்று நீரில் மின்சாரம் பாயும் அபாயமும் உள்ளது. நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

  ஆகவே கலெக்டர் அம்மா அவர்கள் தயவு கூர்ந்து அங்கு தேங்கியுள்ள நீரை அகற்றுவதுடன், கானாற்று கரையை கட்டிக் கொடுத்து கானாற்று வெள்ளம் மேற்கண்ட பகுதிக்குள் மீண்டும் நுழையாதபடி நடவடிக்கை எடுத்து ஏழை கூலித் தொழிலாளிகள் குடும்பத்தில் ஒளியேற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

   மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

     இந்நிலையில் அதிகாரிகளின் நடவடிகையை எதிர்பார்த்து கூலி தொழிலாளிகள் காத்திருக்கிறார்கள்.