சென்னை அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள்:- விஜய் கண்ணீர்! இரண்டு பேர் ஏன் வரவில்லை?!

சென்னை அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள்:- விஜய் கண்ணீர்! இரண்டு பேர் ஏன் வரவில்லை?!

ம.பா.கெஜராஜ்,

   கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி த.வெ.க. சார்பில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

   பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார். ஆனால் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்திருந்தார்.  

 இந்நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள 'பார் பாயிண்ட்ஸ்' ஓட்டலில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் விஜய் சந்தித்து கண்ணீர் மல்க பேசினார்.

 முன்னதாக அங்கு வைக்கப்பட்ட, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர், அ வர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

  மேலும் நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 110 பேரும் தங்களது குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்து பேசி னார்.

   அப்படியிருக்க உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தவெக தலைவர் விஜய் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார்.   மேலும் "சென்னை அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நிச்சயம் கரூரில் வந்து சந்திப்பேன். வாழ்நாள் வரை நான் உங்களுடன் இருப்பேன்.

குடும்பத்தில் ஒருவனாக உங்களுடன் நான் இருப்பேன். உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்து தருவேன். வேலைவாய்ப்பு,திருமணம், கல்வி என அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று விஜய் உறுதி அளித்துள்ளார்.

   இது ஒரு புறம் இருக்க ரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 2 பேரின் குடும்பத்தினர், தவெக தலைவர் விஜய்யைச் சந்திக்க சென்னை செல்லவில்லை.

     கூட்ட நெரிசலில் உயிரிழந்த, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த தொகுப்பட்டி புதூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியான அஜிதா(21)வின் குடும்பத்தினர் சென்னை செல்லவில்லை. இதுகுறித்து அஜிதாவின் சகோதரர் அமர்நாத்திடம் கேட்டபோது, 'விருப்பமில்லாததால் செல்லவில்லை' என்றார்.

 அதே போல் நெரிசலில் உயிரிழந்த ஏமூர் புதூரைச் சேர்ந்த பிருத்திக் (10) குடும்பத்தினரும் விஜய்யை சந்திக்கச் செல்லவில்லை. இவரது தந்தை பன்னீர்செல்வம்தான், சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 இந்நிலையில் அவர் தங்கள் குடும்பத்தை விட்டு 8 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றுவிட்டதாகவும், பணத்துக்காக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் சிறுவனின் தாய் சர்மிளா குற்றம்சாட்டி இருந்தது நினைவிருக்கலாம்.