அண்ணாமலை மீதான மதவெறுப்பை தூண்டிய வழக்கு ஒன்பதாம் தேதிக்கு தள்ளி வைத்த உச்ச நீதிமன்றம்!

அண்ணாமலை மீதான மதவெறுப்பை தூண்டிய வழக்கு ஒன்பதாம் தேதிக்கு தள்ளி வைத்த உச்ச நீதிமன்றம்!

Naresh.N.

மத வெறுப்புணர்வை தூண்டியதாக அண்ணாமலை மீது தொடரப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்...

மத வெறுப்புணர்வை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய அண்ணாமலையின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம், தீபாவளி பண்டிகையையொட்டி, யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்த அண்ணாமலை, தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவ மிஷனரி தான் முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகக் குறிப்பிட்டு இருந்தார்.

இது இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் உள்ளதாகக் கூறி, சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் என்பவர், சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக, வழக்கு தொடர்ந்திருந்தார். 

இதுகுறித்து விளக்கம் கேட்டு நேரில் ஆஜராக, அண்ணாமலைக்கு, சேலம் நீதிமன்றம், சம்மன் அனுப்பிய நிலையில் சம்மனையும் வழக்கையும் ரத்து செய்யக் கோரி அண்ணாமலை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், தனது பேச்சைத் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அண்ணாமலையின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை சேலம் நீதிமன்றம் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கலாம் என்றும் உத்தரவிட்டார். 

இந்த உத்தரவுக்கு எதிராக, அண்ணாமலை, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசை எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும் விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.