சிறுமியை அளவுகோலால் அடித்து காயப்படுத்திய ஆசிரியை!

சிறுமியை அளவுகோலால் அடித்து காயப்படுத்திய ஆசிரியை!

ஜி.கே.சேகரன்,

  ஜோலார்பேட்டை அருகே அங்கன்வாடியில் பயிலும் சிறுமியை அளவுகோலால் அடித்து காயப்படுத்திய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததால் பரபரப்பு.

  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி ஜெய் பீம் நகர் பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் இயங்கி வருகிறது.

   இந்த அங்கன்வாடி பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து உண்டு உறங்கி கல்வி பயின்று செல்லும் நிலையில், அதே பகுதியில் வசிக்கும் நந்தகுமார் மற்றும் மாதவி இவர்களின் குழந்தையான தேவதர்ஷினி அங்கன்வாடி பள்ளியில் வந்து கல்வி பயின்று வந்துள்ளார்.

   இந்நிலையில் குழந்தை தேவதர்ஷினி அங்கன்வாடி கட்டிடத்தை விட்டு வெளியே வந்து பூங்காவில் உள்ள ஊஞ்சலில் ஆடியதாக தெரிகிறது.

   அப்போது அங்கன்வாடி ஆசிரியை குழந்தை தேவதர்ஷணியை வலுக்கட்டாயமாக உள்ளே வர அழைத்த பொழுது வர மறுத்த குழந்தையை அளவுகோல் வைத்து அடித்ததாக தெரிகிறது.

  இதன் காரணமாக காயமடைந்த குழந்தையின் பெற்றோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை அடித்த அங்கன்வாடி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

  அதன் பேரில், ஜோலார்பேட்டை காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே காவல்துறை நடவடிக்கை சம்பந்தமாக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அங்கன்வாடி குழந்தை தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.