சாதி பிரச்சனையால் மீண்டும் தாக்கப்பட்ட மாணவன்!

சாதி பிரச்சனையால் மீண்டும் தாக்கப்பட்ட மாணவன்!

 கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 கடந்த 2023-ம் ஆண்டு நாங்குநேரி அரசு பள்ளியில் சின்னதுரை என்கிற மாணவன் கத்தியால் வெட்டப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அவர் தாக்கப்பட்டுள்ளார் என்பதால் பதற்றம் நிலவுகிறது.  சாதியை முன்னிறுத்தி மாணவன் ஒருவன் தாக்கப்பட்டிருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

   நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி மகன் சின்னதுரை. கடந்த 2023-ம் ஆண்டு அரசு பள்ளியில் படித்தபோது, அதே பள்ளியில் படித்து வந்த வேறு சமுதாய மாணவர்கள் சிலர் சின்னதுரையை அவரது வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் வெட்டினர். இதைத்தடுக்க முயன்ற அவரது தங்கையையும் வெட்டினர்.

  இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதன்பின், சிகிச்சை பெற்று குணமடைந்து தனது படிப்பை தொடர்ந்த சின்னதுரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 78 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில், நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. சின்னதுரையை ரெட்டியார்பட்டி மலைப்பகுதிக்கு வரவழைத்து 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

  காயமடைந்த சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, நெல்லை மாநகர துணை ஆணையர் சாந்தாராம் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்களாம்.