சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு – பழைய வரியே தொடரும்!

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு – பழைய வரியே தொடரும்!

.பா. கெஜராஜ்,

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், குறைவாக மதிப்பீடு செய்யப்பட்ட சில சொத்துகளுக்கு மேற்கொள்ளப்பட்ட சொத்துவரி மாற்றியமைக்கும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குறைவாக மதிப்பீடு செய்யப்பட்ட சில சொத்துகளின் சொத்துவரி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். இதற்கு பொதுமக்கள் மற்றும் சொத்து உரிமையாளர்களிடமிருந்து மறுபரிசீலனை செய்யக் கோரி தொடர் கோரிக்கைகள் வந்ததையடுத்து, அவை கவனமாக ஆய்வு செய்யப்பட்டதாகவும், தற்போது வரி மாற்றியமைக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, உயர்த்தப்பட்ட சொத்துவரி தொகை, வரி மாற்றியமைக்கப்படுவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த பழைய அளவிற்கே மீண்டும் கொண்டு வரப்படும். ஏற்கனவே புதிய வரித்தொகையை செலுத்திய சொத்து உரிமையாளர்கள் செலுத்திய கூடுதல் தொகையும் வீணாகாது. அந்தத் தொகை அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன்பண வரியாக ஈடு செய்யப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

முன்னதாக, மாநகராட்சியின் வருவாயைப் பெருக்கவும், சொத்துவரி விதிப்பில் உள்ள முரண்பாடுகளைக் களையவும் மண்டல அளவிலான அதிகாரிகள் மூலம் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், பல வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களின் பரப்பளவு மற்றும் பயன்பாடு முறையாகக் கணக்கிடப்படாமல், குறைவான மதிப்பீட்டில் சொத்துவரி செலுத்தப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட சொத்துகளுக்கு திருத்தியமைக்கப்பட்ட புதிய சொத்துவரி நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு, வரி உயர்த்தப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள், போதிய கால அவகாசம் மற்றும் முன் அறிவிப்பின்றி வரி உயர்த்தப்பட்டதாகக் குற்றம்சாட்டினர்.

மேலும், தற்போதைய பொருளாதாரச் சூழலில் கூடுதல் வரிச்சுமையை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

பொதுமக்களின் கோரிக்கைகளை பரிசீலித்த பின்னர், தற்போது சொத்துவரி மாற்றியமைக்கும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி நிறுத்தி வைத்துள்ளதுடன், ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய வரித்தொகையே தொடரும் என அறிவித்துள்ளது.