அலட்சிய அரசு மருத்துவர்..மக்கள் மறியல்!
கு.அசோக்,
அரக்கோணத்தில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த தூய்மை பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். அரசு மருத்துவமனை டாக்டர் சரியான முறையில் பரிசோதனை செய்யவில்லை என்று அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஏ. பி. எம் சர்ச் 5வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்( 32). இவர் வாலாஜா நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.
ஏ பி எம் சர்ச் பகுதியில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு திருப்பதி பெருமாள் கோயிலுக்கு செல்வதற்காக பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக பஜனை பாடும் நிகழ்ச்சி நடத்துவதற்காக மின்விளக்குகள் மற்றும் மைக் செட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது வெங்கடேசன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ஆனாலும் அவரது உறவினர்கள் வெங்கடேசனை சரியான முறையில் டாக்டர் பரிசோதனை செய்யவில்லை என்று தெரிவித்து அரக்கோணம் அரசு மருத்துவமனை முன்பாக திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர் . இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

admin
