ராதாகிருஷ்ணனை சொல்ல சொல்! நான் பதில் அளிக்கிறேன்.. துரைமுருகன் ஆவேசம்! நூறுநாட்கள் பணியாளர்களை அழைத்து வந்த பரிதாபம்!
கு.அசோக்,
இராணிப்பேட்டை மாவட்டம், கொண்ட குப்பம் ஊராட்சி குமணந்தாங்கல் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் பங்கேற்று நடைபெற்ற முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் முகாமின் மூலம் பயனடைந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன் ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை பெற வேண்டி ஆயிரக்கணக்கில் மனுக்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் மேலும் மக்கள் தங்களது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு முகாம்களில் மனுக்களை வழங்கி வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் உடைய கடமை மாவட்டத்தின் நிலைமையை அரசுக்கு தெரிவிப்பதாகும்.
அதற்குப் பிறகு அரசு முடிவு எடுக்கும் அப்போது நானும் அங்கு இருப்பேன் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு கணிசமான நிதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பூமியே பாய் வானமே கூரை என வாழுகின்ற மக்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் சொந்தமாக அந்த மக்களுக்கு இடம் கொடுத்தால் குடிசையோ குறையோ அமைத்து வசிப்பார்கள் எனவும் எவ்வளவுதான் மாட மாளிகையில் வசித்தாலும் சொந்த வீட்டில் ஒழுகுகிற கூரையில் வசித்தாலும் கிழிந்த பாயில் படுக்கும் போது சொந்த வீட்டில் வசிக்கிறோம் என்ற நிம்மதி கிடைக்கும்.
அப்படிப்பட்ட அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளோம். தளபதி எடுத்திருக்கும் முயற்சியாக எந்த இடமாக இருந்தாலும் அது கோவில் இடமாக இருந்தாலும் சரி புறம்போக்கு மேய்ச்சல் இடமாக இருந்தாலும் சரி நீரோடைக்கு ஒட்டிய இடமாக இருந்தாலும் சரி அந்த இடங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தமான இடங்கள்.
அவை அனைத்தும் ஏழைகளுக்கு இன்று பட்டா போட்டு கொடுக்கிறார்கள். சில இடங்களுக்கு மட்டும் ஸ்டே வாங்கப்படுகிறது. அதாவது நீரோடைகளுக்கு அருகாமையில் உள்ள இடங்களை கை வைக்க கூடாது என தெரிவித்தவர் பிரச்சனை இல்லை என்றால் உடனே மாவட்ட ஆட்சியரே பட்டாவை வழங்கி விடுவார்.

சிக்கல் இருக்கும் என்றால் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அதற்கான நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.
முகாம்களில் மனுக்கள் விடுபட்ட நபர்களை ஒவ்வொரு கிராமமாக நானே தனியாக சென்று மக்களை சந்தித்து அவர்களது மனுவை பெற்று குறைகளை தீர்ப்பேன் என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் இறுதியாக பேட்டியளித்த துரைமுருகன்அரசு பள்ளி செயல்படும்போது நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு, ஒரு நாளில் மாணவர்களின் கல்வி ஒன்றும் பாதிக்கப்படாது என பொறுப்பற்ற முறையில் பதில் அளித்தார்.
கரூர் சம்பவத்தை திசை திருப்புவதற்காக முதலமைச்சர் தீவு குறித்து பேசுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கும் கருத்திற்கு பதில் அளித்த துரைமுருகன்,கச்சத்தீவு என்றால் என்ன என்று பொன் ராதாகிருஷ்ணனை சொல்ல சொல் அதற்கு நான் பதில் அளிக்கிறேன். டைட்டில்களை வைத்து கேள்விகளை கேட்கிறீர்கள் என கிண்டல்அடித்தார்.
நிகழ்ச்சியின் முன்னதாகநிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த பொது மக்களை நீண்ட நேரமாக காக்க வைத்திருந்த நிலையில் குடிநீர் வழங்கப்படாததால் தண்ணீர் கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் முகாமில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் மத்திய பொது மக்களுக்கு அமைச்சர் துரைமுருகனின் ஏற்பாட்டின் பேரில் உணவுகள் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் பொது மக்களுக்கு உணவு இன்றி தட்டுகளை கையில் ஏந்திய படி அலைய வைத்த அலங்கோல காட்சியும் நடைபெற்றது.
நிகச்சியில் கூட்டம் அதிகமாக இருப்பதை போல் காட்டிக் கொள்வதற்காக நூறு நாட்கள் பணியாளர்களை அழைத்து வந்திருந்தனர்.

admin
