7-வனத்துறையினர் மீது கொலை வழக்கு! கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: முதல்வர் விஜய் கடும் கண்டனம்!
வை. கதிரவன்,
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட ஷாக்யா வனப்பகுதியில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மானை வேட்டையாடியதாக கூறி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், மகிமை தாஸ் (48) என்பவர் காயமடைந்து மைசூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்தைத் தொடர்ந்து ஹனூர், கொள்ளேகால் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறை அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், பல்வேறு சாலைகளிலும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், விவசாய சங்கத்தினரும், கிறிஸ்தவ அருட்தந்தையர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். ஹனூர் காவல் நிலையத்தையும் ஏராளமான இளைஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது.
இந்நிலையில், உயிரிழந்த அந்தோணிசாமியின் மனைவி லூர்துமேரி அளித்த புகாரின் அடிப்படையில், வனத்துறையில் பணியாற்றும் ஷிவராஜ், சேகரையா, அனில்குமார் உள்ளிட்ட 7 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மைசூரு மண்டல ஐஜி போரலிங்கையா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் ஒரு வாரத்திற்குள் விசாரணை நடத்தி முதல் கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு சார்பில் தலா ரூ.5 லட்சமும், ஹனூர் எம்எல்ஏ மஞ்சுநாதா சார்பில் தலா ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து அதிகாரிகள் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பிரேதப் பரிசோதனைக்கும், உடல்களைப் பெற்றுக்கொள்ளவும் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து இரண்டு நாட்களாக நடைபெற்ற போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.
தமிழக முதல்வர் விஜய் கடும் கண்டனம்

மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

admin
