விஜய் கட்சியுடன் ஓபிஎஸ்ஸா?...சசிகலாவும் டிடிவியும் இதில் கூட்டா!?

விஜய் கட்சியுடன் ஓபிஎஸ்ஸா?...சசிகலாவும் டிடிவியும் இதில் கூட்டா!?

ம.பா.கெஜராஜ்,

 ஜெயலலிதா மறையும் வரை அம்மா பக்தராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது மறைவுக்கு பின்னர் ஃபுல் டைம் மோடி பக்தராக மாறிப் போனார்.

 பாஜகவின் வாக்கே வேதவாக்காக வாழ்ந்துவந்த ஓபிஎஸ்சை, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்குப் போடும் ஆளாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டதை அறிவோம்.

    இபிஎஸ் கூட்டணிக்குள் வந்த பிறகு ஓபிஎஸ்சை தவிர்க்க ஆரம்பித்தது பாஜக தலைமை. அமித் ஷா இருமுறை தமிழகம் வந்தபோதும் ஓபிஎஸ்சை சந்திக்க அனுமதி கொடுக்கவில்லை.

அதேபோல இப்போது 'உங்களை சந்திப்பது பாக்கியம்' என்று கடிதம் எழுதியும் கூட, ஓபிஎஸ்சை சந்திக்க மறுத்துவிட்டார் பிரதமர் மோடி.

  ஆக, வேறு வழியே இல்லை என்பதை உணர்ந்து அடுத்த ஆப்ஷனை கையில் எடுத்துள்ளார் ஓபிஎஸ்.

   இந்நிலையில்,  சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 2024-2025-ஆம் ஆண்டுக்கான 2,151 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்காதது கல்வி உரிமைச் சட்டத்துக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது என மத்திய பாஜக அரசை ஓபிஎஸ் கடுமையாக கண்டித்துள்ளார்.

  அவரது இந்த கண்டன அறிக்கை பாஜகவை முற்றிலுமாக எதிர்க்க அவர் துணிந்துவிட்டதை காட்டுகிறது.

இதனை பிரதிபலிக்கும் விதமாகவே, தவெக கூட்டணியில் ஓபிஎஸ் இணைய வேண்டும். பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் எனப் பேசியுள்ளார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

   கட்சியின் முதல் மாநாட்டிலே கூட்டணிக்கும் தயார், கூட்டணி ஆட்சிக்கும் தயார் என ஆசை காட்டினாலும், இதுவரை எந்தக் கட்சியும் தவெக பக்கம் வரவில்லை. எனவே ஓபிஎஸ் போல தமிழகம் முழுவதும் அறிமுகமான நபர் கூட்டணிக்கு வருவதை விஜய் மறுக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

   விஜய்க்கு வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கு அதிகம். அதுபோல ஓபிஎஸ்சுக்கும் தென் மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு உள்ளது. எனவே, இருவரும் இணைந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்பது யதார்த்தம்.

 மேலும், டிடிவி தினகரன், சசிகலா போன்றோரையும் விஜய் பக்கம் ஓபிஎஸ் கொண்டுவந்தால் தென் மாவட்டங்களில் கூட்டணிக்கு ஜொலிக்கும்.

 தவெக ஓபிஎஸ் அணி அமையும் பட்சத்தில், பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் கூட்டணிக்குள் வரலாம். ஒருவேளை இதுபோன்ற கூட்டணி அமைந்தால், அது நிச்சயமாக அதிமுக பாஜக கூட்டணிக்கு பெரும் சறுக்கலாக மாறும்.

  ஆகவே பாஜகவும் வேறு வகைகளில் நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பிக்க கூடும்.

  இதையெல்லாம் ஊடகங்கள் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்க மறுபக்கம் விஜய் என்ன செய்வாரோ?