திருச்சிக்கு விரைந்த மீட்புப்படை!

கு.அசோக்,
அரக்கோணத்தில் இருந்து திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள்
மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை அடுத்து அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர் திறப்பு 75,000 கன அடி வரை வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது.
இதனால் சேலம், ஈரோடு, நாமக்கல் ,கரூர்,அரியலூர் ,திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு மேட்டூர் நீர்வளத் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் ஆணையம் கேட்டுக்கொண்டதன் பேரில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் இயங்கி வரும் தேசிய பேரிடர் மீட்பு படை வளாகத்தில் இருந்து தலா 30 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் என 60 வீரர்கள் மீட்பு உபகரணங்களோடு வாகனங்கள் மூலமாக திருச்சி மாவட்டத்திற்கு விரைந்தனர்.
அங்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக முன்னெச்சரிக்கையாக நிலை நிறுத்தப்படுவார்கள் என தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.