அதிகாரிகள் கேட்பதை கொடு! பெண் தலைவருக்கு கெடு!

அதிகாரிகள் கேட்பதை கொடு! பெண் தலைவருக்கு கெடு!

ஜி.குலசேகரன்,

 ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிருப்பு போராட்டம் "சாகும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன்!"

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வரும் காயத்ரி நவீன் குமார் என்பவரது காசோலையில் கையெழுத்து இடும் அதிகாரம், கடந்த 20 மாதங்களுக்கு முன்பு போதிய பெரும்பான்மை இல்லை எனக் கூறி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளாக செய்து வந்த பணிகளுக்கான தொகையை கேட்டாலும் பணம் வழங்கப்படவில்லை என்றும், கூட்டத்தைக் கூட்டினாலும் வார்டு உறுப்பினர்கள் யாரும் வருவதில்லை என்றும், எந்தப் பணிக்காக டெண்டர் விட அறிவிப்பு வெளியிட்டாலும் அதில் கமிஷன் கேட்டு பிரச்சனைகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

   இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதுடன், சுமார் 30 லட்சம் ரூபாய் வரை கடனாளியாக மாறியுள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குனர், திட்ட இயக்குனர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

   மேலும், அதிகாரிகள் வார்டு உறுப்பினர்களுடன் இணைந்து அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து விட்டே பணிகளை செய்துகொள்ளுமாறு கூறுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில், தனக்கு நியாயம் வழங்க வேண்டும் எனக் கோரி, வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி நவீன் குமார் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.தகவல் அறிந்து உமராபாத் காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

 "தனக்கு நியாயம் கிடைக்கும் வரை செத்தாலும் இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டேன்"என்று கூறி காயத்ரி நவீன் குமார் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் போராட்டத்தை கைவிட்டார்.