தண்டனை அளித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்! போலீஸ் திணறல்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த கஞ்சா பிரதர்ஸால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை கீரைத்துறை பகுதியில் கடந்த 7.3.2024ல் 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மதுரை புதுஜெயில் ரோடு முரட்டம்பத்திரி பகுதியை சேர்ந்த சகோதரர்களான பாண்டியராஜன்,பிரசாந்த் மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா ஆகியோரை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.
வழக்கின் விசாரணை மதுரை முதலாவது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் வழக்கை விசாரித்து மூன்று பேருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து மூவரையும் சிறைக்கு அழைத்து செல்ல போலீசார் தயாரானபோது, தீர்ப்பை கேட்டு ஆத்திரமடைந்த பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த் ஆகிய இருவரும் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்து பலத்த குரலில் கூச்சல் எழுப்பியவாறு நீதிமன்றத்தின் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களின் கையில் கண்ணாடி குத்தியதில் ரத்தம் வந்தது.
''நாங்கள் வெள்ளை காளியின் கூட்டாளிங்கள் கிளாமர் காளி கொலையில் எதற்கு சுபாஷ் சந்திரபோசை என்கவுன்டர் செய்தீர்கள்? நாங்கள் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும், நீதிபதியை கொல்லாமல் விடமாட்டோம்'' என கூச்சலிட்டனர்.
போலீசார் அவர்களை மடக்கி பிடித்தவாறு பலத்த பாதுகாப்புடன் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
நீதிமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக இருவர் மீதும் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
போலீஸ் பிடியில் இருந்த கைதிகள் நீதிபதிக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்திருப்பது நீதித்துறையை பரபரப்பாக்கியிருக்கிறது.