கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு – எல்லையில் பதற்றம்!

கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு – எல்லையில் பதற்றம்!

வை. கதிரவன்,

பெங்களூரு: காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தைக் கண்டித்து, கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கன்னட கூட்டமைப்புத் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்டவை இயங்காது என அவர் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்றும், அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கன்னட அமைப்புகள் போராட்டத்தை அறிவித்துள்ளன.

எனினும், முழு அடைப்பு போராட்டத்தை கைவிடுமாறு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என கன்னட ரக் ஷன வேதிகே, தனியார் பள்ளி, கல்லூரிகள் கூட்டமைப்பு, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளன.

இதனால், மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில், தமிழகம்-கர்நாடகா இடையிலான பேருந்து மற்றும் வாகனப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட பகுதிகளில் கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி வகித்து வந்த நீர்ப்பாசனத் துறை பொறுப்பு, மண்டியாவைச் சேர்ந்த செலுவராயசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.