ஆம்பூரில் கைதுப்பாக்கி பறிமுதல்!

கு.அசோக்,
தமிழகத்தில் கைதுப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருவதாக தெரிகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கம்பிக்கொல்லை ஆசனாம்பட்டு ரோடு இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சையத் பீ£. இவரது மகன் ஐதர் உசேன் என்ற ஆசிப். இவர் ஆம்பூர் அடுத்த கொம்மேஸ்வரத்தில் இயங்கி வரும் தனியார் ஷூ நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் ஆசிப் ஆம்பூர் ரெட்டித்தோப்பு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, அங்கு ஆம்பூர் டவுன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் ஆசிப் தனது வாகனத்தை திருப்பி செல்ல முயன்றார்.
சந்தேகத்தின்பேரில் போலீசார் ஆசிப்பை பிடித்து விசாரித்தனர். அவரது பாக்கெட்டில் சோதனையிட்டபோது துப்பாக்கி குண்டுகள் அடங்கிய பிளாஸ்டிக் டப்பா ஒன்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், அவரது தந்தை சையத் பீர், சகோதரி ஹாஜிரா ஆகியோரிடமும் போலீசார் விசாரித்தனர். பின்னர், வீட்டில் நடத்திய சோதனையில் 2 ரிவால்வர், ஒரு பிஸ்டல் மற்றும் ஒரு ஏர் கன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் ஒரு பையில் இருந்த 2 பெரிய கத்திகள் மற்றும் ஒரு சிறிய கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, ஆம்பூர் டவுன் போலீசார் சட்ட விரோத ஆயுதங்கள் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்