-ஆம் வகுப்பு சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார்! ஆத்திரத்தில் பள்ளிக்குள் புகுந்த பெற்றோர் – ஆசிரியரை அழைத்துச் சென்ற போலீசார்! ஆம்பூரில் பரபரப்பு!
செய்தி: ஜி. குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விண்ணமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியை, அதே பள்ளியில் பணியாற்றும் சரவணன் என்ற ஆசிரியர் சில நாட்களுக்கு முன்பு கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தீபாவளி விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், உறவினர்களுடன் பள்ளிக்குச் சென்றனர்.
அப்போது ஆசிரியர் சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், சிங்கப்பெண் அதிரடிப் படையினர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மேனகா ஆகியோர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, தனது மகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் சரவணனை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே, ஆசிரியரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி அப்பகுதி பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் திரண்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பள்ளியில் கல்வி கற்கச் செல்லும் பிஞ்சுக் குழந்தைகளின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுவதாக எழுந்துள்ள இந்தப் புகார் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவதுடன், குழந்தைக்கு தேவையான மருத்துவ மற்றும் உளவியல் பாதுகாப்பு வழங்கவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

admin
