அரவைக்கு அனுப்பிய 1,500 டன் நெல் மாயம்: 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்! ரூ.3.75 கோடி அரசுக்கு இழப்பு – நான்கு அரிசி ஆலைகள் மீது நடவடிக்கை!!

அரவைக்கு அனுப்பிய 1,500 டன் நெல் மாயம்: 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!  ரூ.3.75 கோடி அரசுக்கு இழப்பு – நான்கு அரிசி ஆலைகள் மீது நடவடிக்கை!!

.பா. கெஜராஜ்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரவைக்காக அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்பட்ட 1,500 டன் நெல் மூட்டைகள் மாயமானதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதை முறையாக கண்காணிக்கத் தவறிய நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் காஞ்சிபுரம் மண்டல மேலாளர் அருள்வனிதா மற்றும் தரக்கட்டுப்பாடு உதவி மேலாளர் ஜெயவேல் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து, நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில் சுமார் 1.20 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதிகளில் சம்பா, நவரை, சொர்ணவாரி உள்ளிட்ட பருவங்களில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் ஆண்டுதோறும் சுமார் 1.35 லட்சம் டன் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து, அவற்றை அரிசி ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக மாற்றி ரேஷன் கடைகளுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரிசி ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரவைக்காக அனுப்பப்பட்ட 1,500 டன் நெல் மூட்டைகள் அரிசியாகவும் மாற்றப்படாமல், நெல்லாகவும் இருப்பில் இல்லாமல் மாயமாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வெள்ளைகேட் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு அரிசி ஆலையில் மட்டும் 1,250 டன் நெல் இருப்பில் இல்லாதது தெரியவந்துள்ளது. மேலும், மற்றொரு ஆலையில் 100 டன், இரண்டு ஆலைகளில் தலா 150 டன் என மொத்தம் 1,500 டன் நெல் மூட்டைகள் கணக்கில் இல்லாதது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாயமான நெல்லின் மதிப்பு சுமார் ரூ.3.75 கோடி என துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முறைகேட்டை முறையாக கண்காணிக்கத் தவறியதாக காஞ்சிபுரம் மண்டல மேலாளர் அருள்வனிதா மற்றும் தரக்கட்டுப்பாடு உதவி மேலாளர் ஜெயவேல் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. உரிய விளக்கம் அளிக்கப்படாத நிலையில், இருவரையும் சஸ்பெண்ட் செய்து மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், முறைகேட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதிய அதிகாரிகள் நியமிக்கப்படும் வரை செங்கல்பட்டு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் நெல் கொள்முதல் மற்றும் அரவை நடவடிக்கைகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நெல் கணக்கில் இல்லாமல் போன சம்பவம், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.