“மலர வேண்டிய நான் சுருங்கிக் கொண்டே போனேன்…” – 2 ஆண்டுகால வேதனை குறித்து மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்!

“மலர வேண்டிய நான் சுருங்கிக் கொண்டே போனேன்…” – 2 ஆண்டுகால வேதனை குறித்து மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்!

.பா.கெஜராஜ்,

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் அனுபவித்த மன உளைச்சல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட வேதனைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சமீபத்தில் தனது சமூக வலைதளப் பதிவில், “இறுதியில் அமைதியை அடைய, முடிவற்ற பாதைகளை விட்டுவிட வேண்டும் என அனுபமா குறிப்பிட்டிருந்தார். இதனால் அவரது காதல் உறவு முடிவுக்கு வந்திருக்கலாம் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின.

இந்நிலையில், ‘I AM with Dhanya Varma’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் தனது கடந்த கால அனுபவங்கள் குறித்து அனுபமா விரிவாகப் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், தனது சமூக வலைதளப் பதிவு ஒரே நாளில் உருவானது அல்ல என்றும், அதன் பின்னால் இரண்டு ஆண்டுகளாக தான் அனுபவித்த உடல் மற்றும் மன வேதனைகள் இருந்ததாகவும் தெரிவித்தார்.

நான் இரண்டு ஆண்டுகளாகநார்சிசிஸ்டிக் அப்யூஸ் எனப்படும் மன உளவியல் துன்புறுத்தலை அனுபவித்தேன். அந்த உறவு தொடங்கிய பிறகு, நான் என்னையே இழக்கத் தொடங்கினேன். என் உடல் எடை குறைந்தது. மலர வேண்டிய நான், மெல்ல சுருங்கிக் கொண்டே போனேன் என அனுபமா தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற துன்புறுத்தல்களை அனுபவித்தும் அதை இன்னும் அடையாளம் காணாதவர்களே மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தனது பதிவுக்கு சிலர் ஆதரவாக கருத்து தெரிவித்ததாகவும், சிலர் அடிப்படையற்ற கருத்துகளை பகிர்ந்ததாகவும் கூறிய அனுபமா, தான் உண்மையாக குணமடைந்த பிறகே தனது அனுபவங்களைப் பகிர வேண்டும் என நினைத்ததாக தெரிவித்தார்.

சமீபத்தில் இயற்கையை ரசித்தும், கடற்கரையில் நேரம் செலவிட்டும் இருக்கும் வீடியோ ஒன்றையும் அனுபமா சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், தனது அமைதியையும் வாழ்க்கையையும் மீண்டும் தேர்வு செய்துள்ளதாகவும், தன்னை மீண்டும் கண்டுபிடிக்கும் பயணத்தில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

தனது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனுப்பிய ஒவ்வொரு செய்தியும், பிரார்த்தனையும், அன்பும் தனக்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் கிடைத்ததாகவும் அனுபமா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அனுபமா தனது உறவில் இருந்த நபரின் பெயரை வெளிப்படையாக குறிப்பிடவில்லை. கடந்த ஆண்டு முதல் நடிகர் துருவ் விக்ரமுடன் அவர் காதலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவி வந்த நிலையில், இருவரும் தற்போது தங்களது உறவு குறித்து பொதுவெளியில் பேசாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.