தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி- மூவர் கவலைக்கிடம்!

தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி- மூவர் கவலைக்கிடம்!

கு.அசோக்,

 இராணிப்பேட்டை அருகே தனியார் தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி ஒருவர் பலி- மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை

  இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் ஆண்டாள் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் உள்ள ரசாயன கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை நேற்று இரவு 11 மணியளவில்  நடைபெற்றது.இந்த பணியில் 8 தொழிலாளிகள்  ஈடுபடுத்தப்பட்டனர்.

  இந்நிலையில் தமிழ்ச்செல்வன், மகேந்திரன் ,ராஜா , ராம்தாஸ் ஆகிய நான்கு பேர் ரசாயன கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய தொட்டியில் இறங்கி உள்ளனர்.

  அப்போது திடீரென தமிழ்ச்செல்வன் மயங்கி கீழே விழ அடுத்தடுத்து மகேந்திரன், ராஜா, ராம்தாஸ், ஆகியோர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர் இதனை கண்ட மற்ற நான்கு தொழிலாளிகளும் தொட்டியில் மயங்கி விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

   சம்பவம் குறித்து உடனடியாக  காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் அடிப்படையில் விரைந்து வந்த சிப்காட் போலீசார் மயங்கியவர்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதில் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மற்ற மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிப்காட் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

   சிப்காட் அருகே தோல் தொழிற்சாலையில்  ரசாயன கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி விஷவாயுத்தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.