மோசடி வழக்கு தொடர்புடைய மாஜி மந்திரி ஆளுங்கட்சியில் இணைப்பா! சி.எம்.மிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க திட்டம்!

மோசடி வழக்கு தொடர்புடைய மாஜி மந்திரி ஆளுங்கட்சியில் இணைப்பா! சி.எம்.மிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க திட்டம்!

ம.பா.கெஜராஜ்,

 அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திமுகவுக்கு போகிறாரா இல்லையா என்று பட்டிமன்றம் வைக்காத குறையாக திருப்பத்தூர் மாவட்டம் பரபரத்துக் கிடக்கிறது.

   இந்த பரபரப்பான சூழல் அரசியல் வட்டத்தில் மட்டுமே நிலவி வந்தாலும் கூட, அந்த முன்னாள் அமைச்சரிடமும் அவரது பிஏவிடமும் பணம் இழந்ததாக கூறி வழக்கு தொடுத்துள்ள 108 அப்பாவிகள் மதில் மீது பூனையாக விழி  பிதுங்கி நிற்கின்றார்கள்.

 இந்நிலையில் வருகின்ற 14 ஆம் தேதி திருப்பத்தூர் வரும் சி.எம்.மிடம் இந்த முறைகேட்டை பற்றி புகார் அளித்து தீர்வு கிடைக்க வழி செய்யுமாறு கோரவுள்ளார்களாம்.

  இது அவ்வளவு சாமன்யமான விஷயம் இல்லைதான் என்றாலும் கூட முயல்கிறார்களாம்.    

  இது கோடிகணக்கான பணத்தை ஏப்பம் விட்ட செயல் என்பதாலும், அரசியல் சம்மந்தப்பட்டது என்பதாலும் சற்று விலாவரியாக பார்ப்போம். 

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த அதிமுக மாஜி மந்திரி நிலோபர் கபில், திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் புறக்கணிப்பு காரணமாக நிலோபர் கபில் கட்சி தாவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தின்போது தொழிலாளர் நலத்துறை மந்திரியாக இருந்தவர் நிலோபர் கபில். தொழிலாளர் நலத்துறை மந்திரியாக நிலோபர் கபில் இருந்த காலத்தில், கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து, அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

   சிறிது காலம் அமைதியாக இருந்த நிலோபர் கபில் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

  இருந்த போதும் அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. கட்சி தலைமையுடனும், வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டமான திருப்பத்தூர் மேற்கு மாவட்ட அதிமுக கழகச் செயலாளரும், மாஜி வணிக வரித்துறை மந்திரியுமான கே.சி.வீரமணி உடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததால் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டும் அவருக்கு வழங்கப்படவில்லை. ஊழல் முறைகேடு வழக்கும் இதற்கு முக்கிய காரணம்.

   அவர் மீது எழுந்த இந்த முறைகேடு புகாரை திசைதிருப்பும் விதமாக,  தேர்தலில் தனக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு வணிகவரித்துறை மந்திரியும், ஜோலார்பேட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளருமான கே.சி.வீரமணிதான் காரணம் என நிலோபர் கபில் குற்றம்சாட்டினார்.

 அப்படியிருக்க  அவர் திமுகவில் இணைய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. வரும் 14 ஆம் தேதியன்று திருப்பத்தூர் மாவட்டம்ஜோலார்பேட்டை பொன்னேரியில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் தி.மு.க வடக்கு மண்டல 47 தொகுதி வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு நடைபெற இருக்கிறது.

  அந்த நிகழ்வில், அதிமுக மாஜி மந்திரி நிலோபர் கபில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைவார் என்று கூறப்படுகிறது.

  இன்னும் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் இருந்து மாஜிக்கள், முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி ஆளும் திமுகவில் இணைந்து வரும் நிலையில் ஊழல் வழக்கு தொடர்புடைய மாஜியும் இதில் இணையவிருப்பதாக பேசப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

  அந்த மாஜி மந்திரி ஆட்சியில் இருந்தபோது,  வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியில் பல்வேறு ஏழை எளியோரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனது உதவியாளரான பிரகாஷ் என்பவர் மூலம் 108 பேரிடம் பல லட்சங்கள் பெற்று கோடியில் மோசடியில் ஈடுபட்டதாககவும், அதில் கொஞ்சம் கிள்ளிப்போட்டதாகவும் பிரச்சனைகள் உள்ளது.

  இந்நிலையில்  பெண் மந்திரியின் உதவியாளர் பிரகாசம் மற்றும் பெண் மந்திரி மீதும் குற்றசாட்டுகளை முன்வைத்து பணத்தை கொடுத்து ஏமர்ந்தவர்கள் திருப்பத்தூருக்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நேரடியாக புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

   இது குறித்து தகவல் அறிந்த உளவுத்துறை சம்மந்த்தப்பட்டவர்களிடம் பேசி சமாதானப்படுத்த முயற்சிப்பதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

   இந்த விவகாரம் குறித்து திமுக மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜ் தெரிவிக்கையில், சார் யார் தான் ஊழல் செய்யவில்லை. அந்த அம்மா  கட்சியில் சேருவேன் என்பது பற்றி உறுதியா சேர்ந்த பின்னர்தான் தான் தெரியும். மனுஷன் எப்படி வேண்டுமானாலும் மாறலாம், அங்க இருக்கும் போது ஊழல் பிரச்சனையை கிளப்பாதவர்கள் இப்போது பேசுகிறார்கள் என்றார்.

  அடுத்தாக முன்னாள் அமைச்சரும் அதிமுக மா.செ.வுமான கே.சி.வீரமணியிடம் பேசினோம், எனக்கு எதுவும் தெரியாதுங்க. இப்பக்கூட செயல் வீரர்கள் கூட்டம் நடத்தினோம். அதில் அந்த அம்மா பங்கேற்று ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக முதல்வரின் செயல்பாடுகளை கண்டித்து பேசினார். வேறு ஒன்றும் இப்போதைக்கு சொல்ல முடியாது என்றார்.

    இது குறித்து மாஜி பெண் அமைச்சர் நிலோபர் கபில் அவர்களிடம் விவரம் அறிய முற்பட்டோம். அவர் செல் அழைப்பை ஏற்கவில்லை.  பின்னர் உண்மை தன்மையை அவர் சொல்ல முன்வந்தால் பரிசீலித்து அவை பிரசுரம் செய்யப்படும். 

  அந்த முன்னாள் அமைசருக்கு வாணியம்பாடி தொகுதி மக்கள் மத்தியில் அவ்வளவு நல்ல ஒப்பினியன் இல்லை என்று சொல்லப்படுகிற நிலையில்,  அவரை சேர்த்துக்கொள்ளவும், விடாமல் தக்க வைத்துக் கொள்ளவும் இந்த கழகங்கள் ஏன் துடிக்கிறதோ?

  அய்யா கரைவேட்டிகளே வாக்காளர்களான மக்களையும் மனதில் நினையுங்கள் இதோ வந்துவிட்டது தேர்தல்.   

   எது எப்படியோ மோசடி வழக்கு தொடர்புடையவர் பற்றின தகவல்கள் மேலிடத்தின் பார்வைக்கு சென்றால் சரி.