திமுக மீண்டும் ஆட்சி அமைக்க இபிஎஸ்-ஸின் பிடிவாதம் உதவுகிறதா? அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி! என்னதான் பேசினார்கள்?
ம.பா.கெஜராஜ்,
2026 தமிழக சட்ட பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், செங்கோட்டையன், ஓபிஎஸ், தினகரன், சசிகலா என பலமுனைகளில் இருந்தும் இ.பி.எஸ்-ஸிக்கு நெருக்குதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவர்கள் மூவரும் அதிமுகவில் சேர்க்கப்பட்டாலும் கூட அவர்களில் எவரும் சிஎம் கேண்டிடேட் கிடையாது. அந்த வாய்ப்பு சாட்சாத் இபிஎஸ்ஸிக்குத்தான்.
மறுபக்கம் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடுவோம் என்று உறுதியோடு நிற்கிறது திமுக. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் சிக்கல் பிண்ணிக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், அதிமுகவில் அடைக்கலம் கிடைக்காத விரக்தியோடு, பாஜகவும் பாதகம் செய்துவிட்ட வருத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓபிஎஸ். அதேபோல, எங்களுக்கு துரோகம் செய்த இபிஎஸ் இருக்கும் பக்கம் தப்பித் தவறியும் இருக்க மாட்டோம் என சபதம் போட்டு கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டார் டிடிவி தினகரன்.
அப்படியிருக்க எடப்பாடி பழனிசாமியின் கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனும், தன் பங்குக்கு நெருக்கடியை ஆரம்பித்துள்ளார். பிரிந்து சென்ற எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோஷத்தை வலுவாக முன்வைக்கிறார் அவர். வழக்கம்போல சசிகலாவும், அதிமுகவை நிச்சயமாக ஒன்றிணைப்பேன் என்று அதே பல்லவியை பிடித்துக் கொண்டுள்ளார்.
ஆனாலும், அதிகாரபூர்வமாக இப்போது அதிமுகவை கையில் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பும் கிடையாது, சமாதானமும் கிடையாது என பொட்டில் அடித்தாற்போல சொல்லிவிட்டார். 'ஆட்சியை கவிழ்க்க முயன்ற துரோகிகளுக்கு கட்சியில் மீண்டும் இடமில்லை. ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம்' என்று சொல்லிவருகிறார்.
அப்படியிருக்க, 2024 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 23 சதவீத வாக்குகளும், பாஜக கூட்டணிக்கு 18 சதவீத வாக்குகளும் கிடைத்தது. இதனை கூட்டினால் 41 சதவீதம் வருகிறது. அதாவது, திமுக கூட்டணி பெற்ற 46 சதவீத வாக்குகளுக்கு பக்கத்தில் இது வருகிறது. எனவே, தற்போதைய ஆட்சிக்கு எதிரான மனநிலையும், தனது சுற்றுப் பயணத்தில் கிடைத்த எழுச்சியையும் வைத்து எப்படியும் 'அடுத்த முதல்வர் நான்தான்' என்று முடிவே செய்துவிட்டதாக இபிஎஸ் மிதப்பில் உள்ளாராம்.
2024-இல் அதிமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ இருந்தது. அவர்கள் இப்போது இல்லை. அதேபோல பாஜக கூட்டணியில் இருந்த பாமக, ஓபிஎஸ், தினகரன் இப்போது அவர்களோடு இல்லை. எனவே, இந்த வகையில் பார்த்தாலே 7 முதல் 10 சதவீத வாக்குகள் குறையும்.
அதேபோல, 2024-ல் பாஜக கூட்டணியில் இல்லாததால் கணிசமான சிறுபான்மை வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்தன. 2026-ல் அது நிச்சயம் கிடைக்காது. எனவே அந்த வகையில் ஒரு சரிவு இருக்கும் என்பதுதான் பிராக்டிகல்.
இதனால், வெற்றி உறுதி என்ற நிலையில் எல்லாம் அதிமுக - பாஜக கூட்டணி இல்லை.
அதிமுகவால், திமுக கூட்டணியை பலத்தோடு எதிர்க்கவே முடியும், ஆனால் அது ஆட்சியமைக்க உதவாது.
இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், உடும்பு பிடியாக நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி. தேர்தலில் சில நூறு வாக்குகள் கூட பெரும் மாற்றத்தை உருவாக்கும். கடந்த 2021 தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி - தோல்வி மிகக் குறைவான வாக்குகளில் மாறிப்போனது. எனவே, சிறிய கட்சியை இழப்பதுகூட கூட்டணி பெரும் சரிவை உருவாக்கும் என்பது கண்கூடு.
எடப்பாடி பழனிசாமியும், அவருக்கு எதிராக நிற்பவர்களும் ஒன்றிணைவது கிட்டத்திட்ட இனி சாத்தியமில்லை. ஆனால், இதனால் இழப்பு என்பது இபிஎஸ்சுக்குத்தான் ஏற்படும். ஏனென்றால், அவர்தான் பிரதான எதிர்க்கட்சி தலைவர், வலுவான கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றால் முதல்வராகப் போவது இபிஎஸ்தான். ஓபிஎஸ்சோ, தினகரனோ, சசிகலாவோ அல்லது செங்கோட்டையனோ அல்ல.
அப்படியிருக்க அனைவரையும் அனுசரித்து செல்லவேண்டியது எடப்பாடி பழனிசாமிக்கு மிக முக்கியமானது.' ஒருவேளை ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை கட்சியில் இணைக்காவிட்டாலும் கூட்டணியில் சேர்க்கலாம்.
தினகரனையும் கூட்டணிக்குள் தக்க வைக்கலாம். இன்னொரு பக்கம் தேமுதிகவும், அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளது; அவர்களை சமாதானம் செய்து உள்ளே கொண்டுவரலாம்.
ஆனால், எல்லாவற்றையும் பாஜக கவனித்துக் கொள்ளும் என்ற மனநிலையில் இருந்தால் அது சரியாக வராது.
உட்கட்சி குழப்பங்கள் ஒருபக்கம் இருக்க, அதிமுகவுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது தவெக. நிச்சயமாக திமுகவுக்கு எதிரான வாக்குகளில் கணிசமான வாக்குகளையும், பொதுமக்களின்கணிசமான வாக்குகளும் இம்முறை விஜய்க்கு கிடைக்கும்.
அது நிச்சயம் அதிமுக வாக்கு வங்கிக்கு பாதகத்தை உருவாக்கும். அதுபோல டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் அதிமுக பழைய வலிமையோடு இல்லை. அங்கே ஓபிஎஸ், தினகரன் ஒர்க்ஸ் சொல்லிக் கொள்ளும்படியான பாதிப்பை உருவாக்கும்.
இதையெல்லாம் சமாளிக்க்கும் பக்குவம் இ.பி.எஸ்ஸிக்கு உண்டா இல்லையா என்பது போகப்போக தெரியும். அவர் இப்படியே பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தால் அது திமுகவை மீண்டும் அரியணையில் ஏற்ற வழி வகுக்கும்.
அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி! என்னதான் பேசினார்கள்?

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று டெல்லியில் சந்தித்தார். அப்போது, என்ன பேசினார்கள் என்பது வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக தலைமை உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. எனவே பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதாக ஓபிஎஸ் அறிவித்தார்.
தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனும், பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறி, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
பின்னர் அதிமுக ஒருங்கிணைப்புக்கு குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இதுகுறித்து 10 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கெடு விதித்தார். அந்த கெடுவும் கடந்த 15-ம் தேதி முடிந்ததும் விட்டது.
அப்படியிருக்க செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அடுத்ததாக பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். இரவு 8 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க சென்றார். அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோரும் உடன் சென்றார்.
பின்னர் அமித் ஷாவும், பழனிசாமியும் தனியே கலந்துரையாடினர். இந்த சந்திப்பின்போது, "பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" என்று அமித் ஷாவிடம் பழனிசாமி கோரிக்கை விடுத்தார். அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரம் தொடர்பாகவும், நடிகர் விஜயின் தவெக குறித்தும் இருவரும் பேசியதாக தெரிகிறது.
இருவரும் பேசிக்கொண்டதன் விவரங்கள் குறித்து முழுவதுமாக தெரியவரவில்லை எனினும் ஆட்டுவிப்போரின் சொல்லை தட்டாமல் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றும் போது அனைத்தும் தெரியவரும்.
எது எப்படியிருப்பினும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

admin
