அந்த 786 ல் ,394 யாருக்கு? காங்.எம்.பி.க்களில் சிலர் மாத்தி வாக்களிப்பார்களா!

அந்த 786 ல் ,394 யாருக்கு? காங்.எம்.பி.க்களில் சிலர் மாத்தி வாக்களிப்பார்களா!

ம.பா.கெஜராஜ்,

  இந்திய  குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது.

தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன், சுதர்சன் ரெட்டி ஆகியோர் போட்டியிடும் நிலையில் யாருக்கு எத்தனை ஓட்டுகள் கிடைக்கும் என்பது தெளிவாகவே தெரிகிறது.

  ஜூலை 21ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடந்த  திடீரென ராஜினாமா செய்ததை தொடர்ந்து, இந்தியாவின் அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

  இந்நிலையில், இதற்கான தேர்தல் இன்று (செப்டம்பர் 9, 2025) நடைபெறவுள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்த தேர்தலை பொறுத்தவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வர். மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதுதொடர்பான வாக்கு எண்ணிக்கை விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

  மக்களவையில் மொத்த உறுப்பினர்கள்: 542 (ஒரு இடம் காலி)

  மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்கள்: 239 (6 இடங்கள் காலி)

   நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆளும் என்டிஏ கூட்டணிக்கே அதிக பெரும்பான்மை உள்ளது. மொத்தம் உள்ள 542 மக்களவை உறுப்பினர்களில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 293 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. மொத்தம் உள்ள 240 மாநிலங்களவை உறுப்பினர்களில் ஆளும் கட்சி கூட்டணிக்கு 129 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இரு அவைகளிலும் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 786. இதில், 394 உறுப்பினர்களின் ஆதரவை பெறுபவர் அடுத்த குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.

  என்டிஏ கூட்டணிக்கு 422 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதனால், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது.

 இந்நிலையில் பிஜு ஜனதா தளம் (7 எம்.பிக்கள்) மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி (4 எம்.பிக்கள்) ஆகிய கட்சிகள் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் ஒதுங்கி நிற்க முடிவு செய்துள்ளன.

 அப்படியிருக்க  இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் தேர்தல் தொடங்குகிறது. மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம். இதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரகசிய வாக்குச்சீட்டு முறை கடைபிடிக்கப்பட இருக்கிறது. எனவே சி.பி.ராதாகிருஷ்ணன், சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்குச்சீட்டில் பதிவிட்டு பெட்டியில் போடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

 அதற்காக வழங்கப்படும் வாக்குச்சீட்டில் இரண்டு தலைவர்களின் அடையாளம் இடம்பெற்றிருக்கும். அதில் தாங்கள் விரும்பும் தலைவரின் பெயருக்கு அருகில் "1" என எண்ணிக்கையில் குறிப்பிட வேண்டும். இதைக் கொண்டு வாக்குகள் எண்ணப்படும்.

  ஒவ்வொருவர் வாக்கின் ரகசியமும் காக்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தற்போதைய எண்ணிக்கையை விட கூடுதலாக வாக்குகளை பெறுவதற்கு இரண்டு கூட்டணிகளும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

தேர்தலில் வாக்களிப்பதற்காக அனைத்து கட்சி எம்.பிக்களும் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். தேர்தல் முடிந்ததும் இன்று மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். உடனடியாக தேர்தல் முடிவுகளை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  குடியரசு துணைத் தலைவர் தேர்தலை ஒட்டி நேற்றைய தினம் இரண்டு கூட்டணி கட்சிகளும் கூடி ஆலோசனை நடத்தியுள்ளன. சரியான முறையில் வாக்களித்து ஒவ்வொருவரின் ஆதரவையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  இருந்தாலும் கூட இந்தியா கூட்டணியில் அதிருப்தியில் உள்ள சிலர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க கூடும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி காங்கிரஸில் அதிருப்தியில் உள்ள ஓரிரு எம்பிக்களும் அந்த முடிவில் இருப்பதாக அக்கட்சியின் சார்பாக அஞ்சப்படுகிறது.

   அப்படிப்பட்ட அதிருப்தியாளர்களை அடையாளம் கண்டு சமாதானப்படுத்தும் முயற்சியும் நடைபெற்றுள்ளது.

எது எப்படியோ குடியரசு துணைத்தலைவர் யார் என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.