திருமணம் ஆகாதவர்களுக்கு பூங்காவிற்குள் அனுமதி இல்லை! காதலர்கள் அதிர்ச்சி!
ம.டெல்லிராஜன்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் ராமநாயக்கன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பில் குழந்தைகள் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி மேற்கொள்வதற்கான கருவிகள், தியான மண்டபம், மரப்பூங்கா, சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏரிக்கரையையொட்டி உட்காருவதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அப்படியிருக்க ஓசூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து, பூங்காவில் பொழுது போக்கி வருகின்றனர்.
இங்கு காதல் ஜோடிகள் அத்துமீறும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்த பூங்காவில் இரவு நேர காவலாளி இல்லாததால் சமூக விரோத செயல்களும் நடந்து வந்தன. இதனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காலை மற்றும் மாலையில் மட்டும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து பூங்காவை பகலில் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே பூங்காவின் நுழைவு வாயிலில் திருமணம் ஆகாதவர்களுக்கு பூங்காவிற்குள் அனுமதி இல்லை என நேற்று பேனர் வைக்கப்பட்டது. அதில் தமிழக அரசின் முத்திரை, காவல்துறையின் முத்திரை, காவல் உதவி எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது.
திருமணம் ஆகாத இளைஞர்களும், இளம்பெண்களும் பேனரை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களின் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. எனவே அந்த பேனர் அகற்றப்பட்டது. இந்த பேனரை காவல்துறை சார்பில் வைக்கவில்லை என போலீசார் பொய் சொல்லி தப்பிக்க முயல்கின்றனர்.

admin
