மதுரையை கலக்கப்போகும் தவெக வின் 2-வது மாநாடு!

மதுரையை கலக்கப்போகும் தவெக வின் 2-வது மாநாடு!

ம.பா.கெஜராஜ்,

 நடிகர் விஜய் நடத்திவரும் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி  மதுரையில் நடைபெற உள்ளது என  அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  இது குறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி." என்று பதிவிட்டுள்ளார்.

  தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் - விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்றது. அந்த மாநாட்டில் விஜய் மிக நீண்ட உரையாற்றினார். "திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களது இரு கண்கள். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள். பிளவுவாத சக்திகளும், ஊழல் மலிந்த அரசியலும் தான் நம் எதிரி." என்று விஜய் தனது உரையில் குறிப்பிட்டார். அந்த மாநாட்டில் திமுகவை அப்பட்டமாக விமர்சித்தார். மத்திய அரசையும் ஓரளவுக்கு விமர்சனம் செய்தார்.

 பிரம்மாண்டம், வசீகரப் பேச்சு, ஆர்ப்பரித்தக் கூட்டம் என விஜய்யின் முதல் மாநாடு மிக்கப்பெரிய கவனம் பெற்றது. அந்த மாநாடு அவரது அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முக்கிய நகர்வாக இருந்தது. அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பின்னர் ஆகஸ்ட் 25-ல் மதுரையில் 2-வது மாநில மாநாடு நடைபெறும் என்று விஜய் அறிவித்துள்ளார்.

  எம்ஜிஆர் காலம் தொட்டு மதுரைக்கும் புதிதாக அரசியலில் தடம் பதிப்பவர்களுக்கு ஒரு 'ராசி' இருக்கிறது. அந்த 'ராசி' விஜய்க்கு எப்படிப் பொருந்துகிறது என்று பார்க்கலாம் என்றூ பலரும் தெரிவிக்கிறார்கள்.