தவெக நிர்வாகி மாசி பவுன்ராஜ் கைது!

தவெக நிர்வாகி மாசி பவுன்ராஜ் கைது!

ம.டெல்லிராஜன்,

   தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரு வயது குழந்தை உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 51 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

  இந்த சம்பவம் தொடர்பாக கரூரில் விஜய் பரப்புரை மேற்கொள்வதற்கு போலீசாரிடம் அனுமதி பெறப்பட்ட முதல் குற்றவாளியான தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், 2- ஆவது குற்றவாளியான தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 3- ஆவது குற்றவாளியான இணை பொது செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

   இந்த சம்பவத்தை தொடர்ந்து, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்து வந்தனர். கரூர் தமிழக வெற்றிக் கழக அலுவலகமும் மூடப்பட்டு கிடந்தது. அவர்களது செல்போனுக்கு தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.

  தலைமறைவாக இருப்பவர்களை பிடிப்பதற்காக கரூர் ஏ டி எஸ் பி பிரேம் ஆனந்தன் தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் தலைமறைவாக உள்ளவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

  அப்படியிருக்க திண்டுக்கல் சாலை பகுதியில் பதுங்கி இருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை தனிப் படை போலீசார் நேற்று (செப்படம்பர் 29 ) இரவு கைது செய்தனர். இதே போல, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி டி ஆர் நிர்மல் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.

   இதனிடையே விஜய் பரப்புரைக்காக பிளக்ஸ் பேனர்கள் நிறுவுவது, கொடிக் கம்பங்கள் அமைப்பது என்பன உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்த மத்திய மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரை கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போஸ் தங்கையா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.