ஏப்ரல் 23ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல்! ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
நரேஷ். என்,
தமிழக சட்டப்பேரவைக்கான ஆயுட்காலம் மே மாதம் பத்தாம் தேதி முடிவடைகின்ற நிலையில் தற்போது அதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது
இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதியை அறிவித்தார்.
அந்த வகையில் தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மார்ச் மாதம் 30 ஆம் தேதி அன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி தேதி என்றும், ஏழாம் தேதி அன்று வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
வேட்பு மனுவை ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று வாபஸ் பெற கடைசி தினமாகும்.
அதேபோல் மே மாதம் நான்காம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்று மாலையை முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
மேலும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் , அதே தேதியில் கேரளாவிற்கும் ,மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய இரண்டு கட்டமாகவும், ஏப்ரல் ஒன்பதாம் தேதி அசாம் மாநிலத்திலும் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
மேலும் செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறுகையில் தற்பொழுது நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு கேரளா மேற்குவங்கம் அசாம் ஆகிய நான்கு மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குமான தேர்தலில் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
அதற்கு வசதியாக 2.19 லட்சம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள், அவர்களில் 12.51 லட்சம் வாக்காளர்கள் முதல் முறை வாக்காளர்கள் ஆவர்.
மேலும் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 4 லட்சம் பேர் உள்ளனர்.
தேர்தல் நடைபெற உள்ள நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 25 லட்சம் அதிகாரிகள் தேர்தல் பணியாற்றுவார்கள்.

அவர்களில் 15 லட்சம் பேர் தேர்தல் பணியையும், பாதுகாப்பு பணியில் 8.5 லட்சம் பேரும், 40 ஆயிரம் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையிலும், மேலும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கழிவறை குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
அந்த வகையில் ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் ஒரு சக்கர நாற்காலி இருக்கும்.
1200 வாக்காளர்களுக்கு ஒரு சாவடி.
வாக்காளர்கள் செல்போன் வைப்பதற்காக சிறப்பு ஏற்பாடு இருக்கிறது.
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகியவை சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்
அதேபோல வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்கள் உடைய வண்ணப் புகைப்படம் இருக்கும்.
வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் நிலவரத்தை பகிரப்படும்.
வாக்கு எண்ணிக்கைக்கு கடைசி இரண்டு சுற்றுக்கு முன் தபால் ஓட்டு எண்ணப்படும்.
இளைஞர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிக்க வேண்டும் இது இந்திய ஜனநாயகத்தின் தேர்தல் திருவிழா என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அவர்கள் தெரிவித்தார்.
தற்பொழுது தமிழகத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
மாநில அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட்டால் தேர்தல் ஆணையத்தின் பிடியில் சிக்குவார்கள்.

admin
