ஸ்பீடா பைக் ஓட்டியதால் வெட்டு குத்து!
கு.அசோக்,
இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்ற கல்லூரி மாணவரை மடக்கி வேகமாக சென்றதாக வம்புக்கு இழுத்து தாக்கினர். இதில் இரு கோஷ்டியினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 15 பேர் கொண்ட கும்பல் பெண் உட்பட 4 பேரை வீட்டுக்கு வெளியே வரவழைத்து கத்தியால் வெட்டினர். இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த நாகத்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சர்வேஷ். தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
அவர் தனது இரு சக்கர வாகனத்தில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அய்யந்தாங்கல் அருந்ததி பாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்த பாலாஜி என்பவர் சர்வேஷை நிறுத்தி இருசக்கர வாகனத்தில் இவ்வளவு வேகமாக செல்வாயா? என கேட்டு கையால் தாக்கியுள்ளார்.
இது குறித்து சர்வேஷ் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது சிலர் அங்கு வந்து பாலாஜியை தட்டி கேட்டுவிட்டு வீட்டுக்கு சென்றனர்.
தன்னை தாக்கியதில் ஆத்திரமடைந்த பாலாஜி செல்போனில் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து 15க்கும் மேற்பட்டவர்களை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு நாகதாங்கலில் வீட்டிலிருந்த சர்வேஷின் தந்தை சுரேஷ், பாட்டி கிருபாவதி ஆகியோரை அழைத்து கட்டையால் தாக்கி கத்தியால் வெட்டியுள்ளனர்.
இதை தடுக்க சென்ற சர்வேஷ் மற்றும் அவனது தம்பி சந்துரு ஆகியோரையும் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து 15 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடினர்.
இந்த கும்பலில் இருந்த சிலர் போதையில் இருந்ததாக தெரிகிறது. கத்திவெட்டில் படுகாயமடைந்து வலி தாங்க முடியாமல் அலறி துடித்த கிருபாவதி, சுரேஷ், சர்வேஷ் ,சந்துரு ஆகிய நான்கு பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸில் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .
கிருபாவதி, சுரேஷ் படுகாயம் அடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜி அவனது நண்பர்களான பரத், விஜய் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.

admin
