அய்யா...... சாமி... என்னை சிறைக்கு அனுப்பாதீங்க! பாலியல் ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

அய்யா...... சாமி... என்னை சிறைக்கு அனுப்பாதீங்க! பாலியல் ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

Naresh.N.
 சிறைக்கு அனுப்புவதில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும், ஜாமீன் கோரியும் முன்னாள் காவல் உயர் அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, முன்னாள் காவல் துறை உயர் அதிகாரி ராஜேஷ் தாஸ் மீது, குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. அதை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து, கைது செய்வதில் இருந்து விலக்களித்து தனக்கு ஜாமீன் வழங்குமாறு,

முன்னாள் காவல் உயர் அதிகாரி ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு பெண் எஸ்பி  ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடுக்கப்பட்ட வழக்கின் பேரில் விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி உறுதி செய்தது.

இந்நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில், ராஜேஷ் தாஸ் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, கடந்த 23ஆம் தேதி தீர்ப்பளித்தார். அதில், காவல்துறை என்பது ஒழுக்கமான துறையாகும் இந்தத் துறையில் காவலர் வேலை செய்பவர் கூட சமுதாயத்தில் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

இந்த வழக்கின் மனுதாரர், காவல் துறை உயர் அதிகாரியாக, டிஜிபி பதவி வகித்த ஒரு பொறுப்புள்ள அதிகாரியாக பணியில் இருந்தவர். அப்படிப்பட்டவர் உயர்ந்த ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் கொண்டிருக்க வேண்டும். பிற காவலர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் இவர் முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால், தனக்கு கீழ் பணிபுரியும் ஒரு பெண் அதிகாரியிடம், அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்களை தண்டிக்கும் பொறுப்பில் காவல்துறையினர் இருக்கின்றனர்.

ஆனால் மனுதாரர் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்து கொண்டு, தனக்கு கீழ் பணி புரியும் ஒரு பெண் காவல் அதிகாரியிடம், அநாகரீகமாக நடந்து கொண்டது மட்டுமல்லாது, தனக்கு எதிராக புகார் கொடுக்கக் கூடாது என்றும் மிரட்டி உள்ளார்.

இது மிகத் தீவிரமான குற்றமாகும். இவரது இந்தச் செயல், பெண் சமுதாயத்தையே கேவலப்படுத்தும் விதமாக உள்ளது. இந்த வழக்கை மற்ற வழக்கை போல கையாள முடியாது. எனவே, முன்னாள் காவல் உயர் அதிகாரி ராஜேஷ் தாசுக்கு இந்த வழக்கில் சிறை செல்ல விலக்கு அனுமதிக்க முடியாது என்று கூறி, இந்த மதுவை தள்ளுபடி செய்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின், இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், ராஜேஷ் தாஸ் தரப்பில், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ராஜேஷ் தாஸ்சின் இந்த மேல் முறையீட்டு மனுவில், தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கைதாவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.