வீட்டுக்குள் மழை வெள்ளம்... அதிகாரிகளை கண்டித்து சாலைமறியல்!
ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே சிக்கனாங்குப்பம் சரஸ்வதி நகர் பகுதியில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பேருந்துகளை சிறைப்பிடித்து பகுதி மக்கள் சாலை மறியல்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிக்கணாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட சரஸ்வதி நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழை காரணமாக அருகில் இருக்கக்கூடிய குட்டை மற்றும் ஏரி நிரம்பி உள்ள நிலையில் அதனுடைய உபரி வெளியேறி சரஸ்வதி நகர் பகுதியில் வீடுகளுக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் அதிக அளவில் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருவதால் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் முறையான கால்வாய்கள் அமைக்காததாலும், ஓடை கால்வாய் முடியுள்ளதால் மழை நேரத்தில் நீர் செல்ல முடியாமல் வீட்டுக்குள் புகுந்து வருகிறது.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பூமரம் கூட்டு சாலையில் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்பலூர் போலீஸார் மற்றும் நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் தலைமையிலான வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.

admin
