நூற்றாண்டு பழமையான மேம்பாலத்தில் வளர்ந்துள்ள செடிகள்! பாலத்தின் கட்டுமானம் பலவீனமடையும் அபாயம் – பொதுமக்கள் அச்சம்!

நூற்றாண்டு பழமையான மேம்பாலத்தில் வளர்ந்துள்ள செடிகள்!  பாலத்தின் கட்டுமானம் பலவீனமடையும் அபாயம் – பொதுமக்கள் அச்சம்!

செய்தி: கு. அசோக்,

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பெரிய ஏரி கடைவாசல் பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கருங்கற்களால் கட்டப்பட்ட மேம்பாலம் உள்ளது.

சோளிங்கரில் இருந்து பொன்னை, வள்ளிமலை, வேலூர், சித்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், சோளிங்கர் நகராட்சி அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும் செல்லும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக இந்தப் பாலம் உள்ளது.

மேலும் சோளிங்கரை சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் தினசரி இந்தப் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பழமையான இந்தப் பாலத்தின் இருபுறங்களிலும் செடிகள் வளர்ந்து பெரிதாக காணப்படுகின்றன. செடிகளின் வேர்கள் பாலத்தின் கட்டுமானப் பகுதிக்குள் ஊடுருவினால், கருங்கற்கள் விலகி பாலத்தின் கட்டுமானம் பலவீனமடைய வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பாலம் தினசரி அதிகளவில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் கட்டுமான பாதிப்பு ஏற்பட்டு விபத்து நிகழும் முன்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பாலத்தின் இருபுறங்களிலும் வளர்ந்துள்ள செடிகளை உடனடியாக அகற்றி, பாலத்தின் உறுதித்தன்மையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.