கொளத்தூரில் ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ். பாபு மறைவு – அரசியலில் மீண்டும் ஒரு திருப்பம்; இடைத்தேர்தலை எதிர்நோக்கும் கொளத்தூர்!

கொளத்தூரில் ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ். பாபு மறைவு – அரசியலில் மீண்டும் ஒரு திருப்பம்; இடைத்தேர்தலை எதிர்நோக்கும் கொளத்தூர்!

செய்தி: ம.பா. கெஜராஜ்,
தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்த கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ். பாபு (75) உடல்நலக் குறைவால் இன்று (நவம்பர் 19) சென்னையில் காலமானார்.

கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மூச்சுத்திணறல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் ராஜேஷ் அகர்வால் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இன்று பிற்பகல் 2.24 மணிக்கு ஏற்பட்ட மாரடைப்பைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது.

ஸ்டாலினை வீழ்த்திய அரசியல் வெற்றி!

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அன்றைய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வி.எஸ். பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார்.

வி.எஸ். பாபு 82,997 வாக்குகளையும், மு.க. ஸ்டாலின் 74,202 வாக்குகளையும் பெற்றனர்.

2011 முதல் ஸ்டாலின் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த கொளத்தூர் தொகுதியைத் தவெக கைப்பற்றியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே 2006 முதல் 2011 வரை புரசைவாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய வி.எஸ். பாபு, பின்னர் அதிமுகவில் இணைந்து, 2026 பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

வடசென்னையின் அரசியல் களத்தில் நீண்ட அனுபவம் கொண்டவராக விளங்கினார்.

உடல்நிலை குறித்த நீதிமன்ற மனு!

இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சட்டமன்ற உறுப்பினரின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த ஜி. தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

செப்டம்பர் மாதம் மருத்துவமனை வெளியிட்ட ஆரம்பகட்ட உடல்நிலை அறிக்கைகளுக்குப் பிறகு, புதிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படாததைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், சட்டமன்ற உறுப்பினரின் உடல்நிலை குறித்து சட்டப்படி வெளியிடக்கூடிய தகவல்களை அரசு அதிகாரிகள் மூலம் தெரிவிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

தனிப்பட்ட மருத்துவப் பதிவுகளையோ ரகசிய மருத்துவத் தகவல்களையோ கோரவில்லை என்பதையும் மனுவில் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்திருந்த நிலையில், வி.எஸ். பாபுவின் மறைவை மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதியின் உடல்நிலை தொடர்பான வெளிப்படைத்தன்மை குறித்த விவாதத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.

ஆதவ் அர்ஜுனா உருக்கம் – முதல்வர் விஜய் இரங்கல்!

வி.எஸ். பாபுவின் மறைவுச் செய்தியை மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர் என்றும், தங்களது குடும்பத்தின் மூத்த உறுப்பினரை இழந்துவிட்டதாகவும் உருக்கமாகத் தெரிவித்தார்.

கட்சியின் கடினமான காலங்களில் உடனிருந்தவர் என்றும், வடசென்னை மக்களின் பிரச்சினைகளைத் தலைமைக்கு எடுத்துரைப்பதில் அக்கறை கொண்டவர் என்றும் அவரது அரசியல் பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.

தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தியில், பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்ற வி.எஸ். பாபுவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வி எஸ் பாபு உடலுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார் அப்போது அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார்.

அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கட்சியினர் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி!

தன்னைத் தேர்தலில் தோற்கடித்த முன்னாள் சக அரசியல் பயணியான வி.எஸ். பாபுவின் மறைவுக்கு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியான நிலையில், திடீரென வந்த மறைவுச் செய்தி அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாபுவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தேர்தலைச் சந்திக்கப் போகும் கொளத்தூர்!

வி.எஸ். பாபுவின் மறைவால் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பதவி காலியாகியுள்ளது.

இதனால் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அரசியலமைப்புச் சூழல் உருவாகியுள்ளது.

கடந்த தேர்தலில் அன்றைய முதலமைச்சர் ஸ்டாலினையே தோற்கடித்து தவெக வசமாக்கிய கொளத்தூர் தொகுதி, தற்போது மீண்டும் தேர்தல் களத்தை எதிர்நோக்குகிறது.

இந்த இடைத்தேர்தலில் தவெக யாரை வேட்பாளராக நிறுத்தும்? திமுக தனது பாரம்பரிய செல்வாக்கை மீட்டெடுக்குமா? அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும்? என்பவை தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட எதிர்பார்ப்புகளாக உருவெடுத்துள்ளன.

ஒரு பக்கம் வி.எஸ். பாபுவின் மறைவு ஏற்படுத்திய அரசியல் வெற்றிடம்; மறுபக்கம் அவர் ஸ்டாலினை வீழ்த்திப் பெற்ற வெற்றியைத் தக்கவைக்க வேண்டிய தவெகவின் சவால். கொளத்தூர் தொகுதியின் அடுத்த அரசியல் அத்தியாயம் இடைத்தேர்தல் முடிவில்தான் தீர்மானிக்கப்படும்.

வி.எஸ். பாபுவின் மறைவுக்கு லைவ்லுக் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.