ஜெம் வீரமணி வழக்கில் புதிய திருப்பம்! காவல் உயர் அதிகாரிகளின் பங்கு குறித்தும் SIT விசாரணை – உயர் நீதிமன்றத்தில் தகவல்
செய்தி: ம.பா. கெஜராஜ்,
சென்னை:
ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில், ஏற்கனவே நடைபெற்ற காவல் துறை விசாரணையில் உயர் அதிகாரிகளின் பங்கு மற்றும் வழக்கை முடிக்க முயற்சி நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நடத்தி வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், முன்னாள் காவல் ஆணையர் அருணின் தலையீடு காரணமாக விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், வழக்கை முடிக்க ரூ.40 கோடி வரை பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி அக்டோபர் 1 மற்றும் 6-ம் தேதிகளில் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஆஜராகி தன்னிடம் இருந்த ஆதாரங்களை சமர்ப்பித்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மனுதாரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் SIT தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என காவல் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று வருவதால், தற்போதைய நிலையில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தெரிவித்த நீதிபதி, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா வழக்கை சிறப்பாக விசாரித்து வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
இதையடுத்து, அடுத்த கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இந்த நிலையில், ஜெம் வீரமணி வழக்கில் குற்றச்சாட்டுகளின் பின்னணி மட்டுமின்றி, ஏற்கனவே நடைபெற்ற காவல் துறை விசாரணையின் செயல்பாடுகள் குறித்தும் SIT விசாரணை மேற்கொண்டு வருவது வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது

admin
