புதிய தலைமை தேர்தல் ஆணையர் இன்று பதவி ஏற்கிறார்!  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்காக 48 மணி நேரம் காத்திருக்க முடியாதா"? ராகுல் காந்தி கேள்வி!

புதிய தலைமை தேர்தல் ஆணையர் இன்று பதவி ஏற்கிறார்!  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்காக 48 மணி நேரம் காத்திருக்க முடியாதா"? ராகுல் காந்தி கேள்வி!

நரேஷ்.என்,

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக இன்று பதவியேற்கிறார்.தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பதிலாக ஞானேஷ் குமார் அப்பணியில் அமரவைக்கப்படுகிறார். அப்படியிருக்க ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

 இது பற்றின விவரம் வருமாறு,

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, தலைமை தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமிக்கும் முறை கையாளப்பட்டது.

 பின்னர் 1989-ம் ஆண்டு தலைமை தேர்தல் ஆணையரோடு கூடுதலாக 2 தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ச்சியாக 1990-ம் ஆண்டு அப்போதைய வி.பி.சிங் அரசு, சட்டத்தில் திருத்தம் செய்து 2 தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை ரத்து செய்தார்.

  ஆனால், 1993-ம் ஆண்டில் நரசிம்ம ராவ் அரசு, சட்டத்தில் திருத்தம் செய்து மீண்டும் 2 தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முறையை மீண்டும் தொடங்கியது.

 அப்படியிருக்க, 2023-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு முக்கிய தீர்ப்பை வழங்கியது. "பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய உயர் நிலைக் குழு, தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்" என்று தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது.

 இந்நிலையில் 2023-ம் ஆண்டு டிசம்பரில் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்க வகை செய்யும் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

  அதன்படி பிரதமர், மூத்த மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய உயர்நிலைக் குழு தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

   புதிய சட்டத்தின் மூலம் தேர்வு குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டு, மூத்த மத்திய அமைச்சர் குழுவில் சேர்க்கப்பட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

   தற்போது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரும் தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக புதிய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு டெல்லியில் நேற்று முன்தினம் இரவு கூடியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூட்டத்தில் பங்கேற்றனர்.

 இக்கூட்டத்தில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபம் தெரிவித்தார். தேர்வு குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு முடிவு எடுக்கலாம் என்று அவர் கருத்து சொன்னாராம்.

  ஆனால் இந்த சூழலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியிடப்பட்ட அரசாணையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆக அவர் இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்கிறார்.

   தலைமைத் தேர்தல் ஆணையர் 6 ஆண்டுகள் அல்லது 65 வயதை அடையும் வரை பதவியில் நீடிக்கலாம். இதன்படி புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வரும் 2029-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி வரை பதவியில் நீடிப்பார்.

   இந்த ஆண்டு இறுதியில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 2027-ம் ஆண்டில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்கள் புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மேற்பார்வையில் தான் நடைபெறும்.

 

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமா£.  1964-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி உத்தர பிரதேசத்தின் கான்பூரில் ஞானேஷ் குமார் பிறந்தார். கான்பூர் ஐஐடியில் பி.டெக் பட்டம் பெற்ற அவர், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திலும் பட்டம் பெற்றார்.

  கடந்த 1988-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். கேரள பேட்ச் அதிகாரியான அவர் பல்வேறு மத்திய அரசு துறைகளில் பணியாற்றினார்.

 2019-ம் ஆண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது மத்திய உள்துறையின் கூடுதல் செயலாளராக ஞானேஷ் குமார் பணியாற்றினார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டார்.

  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை நிறுவ ஞானேஷ் குமார் முக்கிய பங்கு வகித்தார். இறுதியாக கூட்டுறவுத் துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

   கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்கிறார்.

  தேர்தல் ஆணையர் விவேக் ஜோஷி.

 பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற கூட்டத்தில் புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.இதற்கு ராகுல் காந்தி ஆட்சேபம் தெரிவித்தார்.

   உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு புதிய தேர்தல் ஆணையரை நியமிக்கலாம் என்று அவர் கூறினார். எனினும் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் (பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா) முடிவின்படி ஹரியானா தலைமைச் செயலாளர் விவேக் ஜோஷி புதிய தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டார்.

  1989 ஹரியானா பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான விவேக் ஜோஷி வரும் 28-ம் தேதி தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். மார்ச் 1-ம் தேதி அவர் தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார்.

  அவருக்கு தற்போது 58 வயதாகிறது. வரும் 2031-ம் ஆண்டு அவர் பதவியில் நீடிப்பார். மற்றொரு தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சாந்து வரும் 2028-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

 எனவே ஞானேஷ் குமாருக்கு பிறகு தலைமை தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷியே பதவியேற்பார். வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் அவரது மேற்பார்வையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

  எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "புதிய தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சரிடம் எனது அதிருப்தியை வெளிப்படுத்தினேன்.

  தேர்வு குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டு உள்ளார். இது தேர்தல் நடைமுறை குறித்த கவலையை அதிகரிக்க செய்கிறது.

   நள்ளிரவில் புதிய தலைமை தேர்தல் ஆணையர் அறிவிக்கப்பட்டு உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்காக 48 மணி நேரம் காத்திருக்க முடியாதா" என்று தெரிவித்துள்ளார்.