9-போலீசாருக்கு தூக்கு தண்டனை! சாத்தான் குளம்:-தந்தை மகன் லாக்கப் டெத்! பேனா முள்ளை உடைத்த நீதிபதி!
ம.பா.கெஜராஜ்
சாத்தான்குளம் காவல் நிலைய கொலை வழக்கில் கைதான 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தந்தை மகன் என ஒரு குடும்பத்துடைய ஆணிவேர் பிடுங்கப்பட்டு இருப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் வேதனையுடன் பேசியுள்ளனர்.
சாத்தான்குளம் வழக்கு
சாத்தான்குளத்தில் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற தந்தை மற்றும் மகன் இருவரும் அடித்து கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அப்படியிருக்க சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், தற்போது இவ்வழக்கின் தீர்ப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு ஸ்ரீதருக்கு ரூ. 84 லட்சம் அபராதம் விதித்தும் கடுமையான தண்டை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு பாதிக்கப்பட்ட பென்னிக்ஸின் தாயாருக்கு 1.04 கோடி இழப்பீடு வழங்கி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பேனா முள்ளை உடைத்த நீதிபதி
மேலும் இது போன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டால், இந்த மாதிரி செயல்படும் போலீசாருக்கு அச்சம் ஏற்படாது. எங்கு அதிகாரம் உள்ளதோ, அங்கு பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும். இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
"இது அரிதினும் அரிதான வழக்கு. தந்தை, மகன் இருவரையும் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் அடைத்து வைத்து, விடிய விடிய தாக்கி, கொடுமையாக கொலை செய்துள்ளனர். ஜெயராஜ், பெனிக்ஸை பழிவாங்கும் நோக்கில் தாக்கியுள்ளனர். அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். காவல் மரணங்கள் கொடூரமானடு என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. ஆனாலும், இந்தக் குற்றம் குறைந்தபாடில்லை.
அண்மையில் கூட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரணமடைந்தார். சாத்தான்குளம் சம்பவத்தில், காவல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர் தாக்கியதால் மற்ற காவலர்களும் இணைந்து தாக்கியதாகக் கூறியுள்ளனர். அவர்கள் நினைத்திருந்தால் உயரிதிகாரிகளிடம் கூறி இந்தச் சம்பவத்தை தடுத்திருக்கலாம். ஆனால், குற்றத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனர். அந்த வகையில் அவர்களும் குற்றவாளிகளே. எனவே, குற்?ற?வாளி?கள் 9 பேருக்?கும் இந்த நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது," என்று தீர்ப்பு வழங்கினார்.
அதோடு தண்டனை விதித்த பின்பு பேனா முள்ளையும் உடைத்தார் நீதிபதி முத்துக்குமரன்.
இந்த வழக்கின் தீர்ப்பு பாமர மக்களுக்கான கிடைத்துள்ள நீதி என ஜெயராஜ் மகள் பெர்சிஸ் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இது சம்பந்தமாக அவர் கூறுகையில், 2020 ஆம் ஆண்டு விசாரணை என்ற பெயரில் என் அப்பாவையும், தம்பியையும் அழைத்து சென்று சாத்தான்குளம் காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டாங்க. அவுங்க படுகொலை செய்யப்பட்டு ஆறு வருடங்கள் ஆகியுள்ளது. எங்களுக்கான நீதியை நீதிமன்றம் வழங்குமென்று நாங்கள் நம்பினோம். இன்னைக்கு அது நடந்து இருக்கு.
இந்த விஷயங்களுக்கு எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. எங்களுடைய துன்பத்தை அவுங்களோட துன்பமா மக்கள் நினைச்சாங்க. எல்லாருமே சப்போர்ட்டா இருந்தாங்க.
எங்க ஊர் மக்கள் போராட்டம் செய்த காரணத்தால் தான் மதுரை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்தது. இன்றைக்கு கிடைத்துள்ள நீதி பாமர மக்களுக்காக கிடைத்துள்ள நீதி. இந்த கேஸ் போட்ட காரணமே, எங்களை போல இன்னொரு குடும்பம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான்.
அதே போல் இனிமேல் யாரும் பாதிக்கப்படாத ஒரு தீர்ப்பாக இது அமைந்துள்ளது என்று நாங்க நம்புறோம். இனிமேல் எந்த குடும்பமும் எங்களை போல் பாதிக்கப்படக்கூடாது என்று உருக்கமாக பேசினார்.
மேலும், குற்றவாளிகள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அவர்கள் மேல்முறையீடு செய்தால், உங்களுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உயர்நீதிமன்றத்துக்கு அவுங்க மேல்முறையீடு சென்றால், நாங்களும் போவோம்.
எங்களோட கடைசி மூச்சு வரைக்கும் போராடுவோம். இன்னொரு குடும்பத்துக்கு இந்த மாதிரி ஒரு சம்பவம் நடக்காத அளவுக்கு நீதிமன்றம் செயல்படும் என்று நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் தந்தை சகோதரர் இருவரையும் இழந்துள்ள பெர்சிஸ், தாங்கள் அனுபவித்த துன்பத்தை போன்று வேறொரு குடும்பத்துக்கு நேர்ந்து விடக்கூடாது என்று சொன்னார்.

admin
