"துரோகத்தின் உருவம் பழனிசாமி" முகஸ்டாலின் விமர்சனம்!
ம.பா.கெஜராஜ்,
'பாகுபலி' படத்தில், "விசுவாசத்திற்கு ஒரு உருவம் இருந்தால் அது நீதான் கட்டப்பா" என்றொரு வசனம் இருக்கும். அதுபோல், "துரோகத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால் அது பழனிசாமிதான்" என்று விருதுநகரில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுகவை போல் சாதனைகள் எதையும் சொல்ல முடியாமல் அவதூறுகளையும், தரம் தாழ்ந்த பேச்சுகளையும் நம்பி பரப்புரை செய்கிறார் பழனிசாமி. பழனிசாமி என்று சொன்னால் அது பொய், பித்தலாட்டம் என்றுதான் பொருளாகும். 'பழனிசாமி சொன்ன பொய்கள்' என்று, ஒரு புத்தகமே போடலாம்! அந்த அளவுக்கு பொய்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
5 முறை முதல்வராக இருந்த கருணாநிதியை பற்றி, பச்சை பொய்யை பேசிய பழனிசாமிக்கு, நான் நெல்லையில் பதிலடி கொடுத்திருக்கிறேன்.
சங்கி கூட்டணியில் சேர்ந்ததால் அவர்களை போலவே வாட்ஸ் அப் வதந்திகளை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
காமராஜர் மறைவுற்ற போது, சொந்த மகனை போல் உடனிருந்து இறுதி நிகழ்வுகளை செய்தவர் கருணாநிதி. இது வரலாறு!
பழனிசாமி சொன்ன பொய் உண்மை என்றால், அந்த காலத்திலேயே இது சர்ச்சையாகி இருக்கும். பத்திரிகைகளில் செய்தியாகி இருக்கும். ஆனால், அப்படி எதுவுமே இல்லை. தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய புத்தகங்களிலேயே கருணாநிதியை புகழ்ந்துதான் எழுதியிருக்கிறார்கள்.
முந்தாநாள் அடித்த காற்றில் முதல்வராகி, மக்களால் தூக்கியெறியப்பட்ட பழனிசாமிக்கு இதெல்லாம் தெரியுமா? தப்பு செய்தால் வருத்தம் தெரிவிப்பதுதான் நல்ல மனிதருக்கான இலக்கணம். அதைவிட்டுவிட்டு, மேலும் மேலும் பொய்களை சொன்னால், பழனிசாமி இன்னும் அசிங்கப்பட்டுத்தான் போவார்.
இப்போது புதிதாக இன்னொரு பொய்யை சேர்த்திருக்கிறார்! "அரசு ஊழியர்களை ஆசை வார்த்தை காட்டி, திமுக அரசு ஏமாற்றிவிட்டது!" என பழனிசாமி பேசியிருக்கிறார்.
நிறைவேற்றவே முடியாது என்று சொன்னதை நாம் செய்துவிட்டோம் என்பதை தாங்கிக்கொள்ள முடியாமல், கடுப்பில், பழனிசாமி இப்படி எல்லாம் பேசிக் கொண்டு திரிகிறார். லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை நாங்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறோம்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கொடுமைப்படுத்தி, கொச்சைப்படுத்தி, அவர்களுக்கு தரும் ஊதியத்தையும் இழிவுபடுத்தி பேசிய பழனிசாமிக்கு அவர்களிடம் இருந்து, ஸ்வீட்டும் கிடைக்காது! அவர்களின் ஓட்டும் கிடைக்காது! இதுதான் உண்மை.
அரசு ஊழியர்களுக்கு மட்டுமா துரோகம் செய்தார்! பழனிசாமி துரோகம் பண்ணாத தரப்பே தமிழ்நாட்டில் இருக்க முடியாது! மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து உழவர்களுக்கு துரோகம்! பொள்ளாச்சியில் பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்து, பெண்களுக்கு துரோகம்!
குடியுரிமை திருத்த சட்டம், வக்பு திருத்த சட்டம் என்று பாஜகவின் எல்லா சட்டத்திற்கும் ஆதரவு கொடுத்து சிறுபான்மை சமூகத்திற்கு துரோகம்! செய்தார்.
கட்சியில் அவரை வளர்த்துவிட்ட, செங்கோட்டையனுக்கு துரோகம், பதவி கொடுத்த சசிகலா, தினகரனுக்கும் துரோகம், ஓபிஎஸ்-க்கு துரோகம், உங்கள் ஆட்சியை காப்பாற்றிய முன்னாள் சட்டப்பேரவையின் தலைவர் தனபாலுக்கே சீட்டு கொடுக்காமல் துரோகம்.
எல்லாவற்றிற்கும் மேல், மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்பட்ட பாஜகவை எதிர்த்த ஜெயலலிதாவுக்கு, அதே பாஜகவுடன் கூட்டணி வைத்து துரோகம். இப்போது நான் சொன்ன துரோகத்தை உங்களால் எண்ண முடிந்ததா? பழனிசாமியின் தேர்தல் தோல்விகளை கூட நீங்கள் எண்ணிவிடலாம்.
பாகுபலி படத்தில் சத்தியராஜை பார்த்து சொல்வது மாதிரி ஒரு டயலாக் வரும். "விசுவாசத்திற்கு ஒரு உருவம் இருந்தால் அது நீதான் கட்டப்பா" அப்படி ஒரு வசனம் இருக்கும். அதுபோல், துரோகத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால் அது பழனிசாமிதான்! இப்படி, தன்னை நம்பிய அத்தனை பேருக்கும் அல்வா கொடுத்த பழனிசாமி பேசுவதை மக்கள் எப்படி நம்புவார்கள்?
நம்முடைய தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டாரை களத்தில் இறக்கிவிட்டு, நான் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேல், பெண்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைவது மாதிரி ஒரு அல்டிமேட் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம் என்று பேசினார்.

admin
