தலைவரானதும் அண்ணாமலையை காலணி அணியவைத்த நயினார் நாகேந்திரன்!

தலைவரானதும் அண்ணாமலையை காலணி அணியவைத்த நயினார் நாகேந்திரன்!

 ம.பா.கெஜராஜ்,

 பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று தேர்வு செய்யப்பட்டார். சென்னை வானகரத்தில் நடந்த நிகழ்வில் அவருக்கு தேர்தல் வெற்றிச் சான்றிதழை மேலிடப் பொறுப்பாளர்கள் அளித்தனர். பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து விடைபெற்ற அண்ணாமலை, நயினார் நாகேந்திரனை கட்டியணைத்து வாழ்த்து பகிர்ந்தார்.

  முன்னதாக, தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

   பாஜக தேசிய பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி மற்றும் தருண் சுக் ஆகியோர், பாஜகவில் மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.

   இந்த பதவிகளுக்கு போட்டியிடுவோர் நேற்று (ஏப்.11), மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சட்டப்பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்பமனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவர் வெற்றிபெற்றார்.

 பின்னர் மேடையில் பேசிய நயினார் நாகேந்திரன், "என்னை மாநிலத் தலைவராக தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்த முன்னவர்கள் ஒவ்வொரு படியாக கட்சியை வளர்த்து வந்தனர். ஒவ்வொரு படியாக கட்டப்பட்ட பாஜக கோபுரத்தின் மீது கலசத்தை வைத்தவர் அண்ணாமலை. கலசத்தின் மீது 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் குடமுழுக்கு நடத்தப்போகிறோம். அண்ணாமலை புயலாக இருந்தார். நான் தென்றலாக இருப்பேன்.

   2026ஆம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலர்ந்தே தீரும். தாமரை மலர்ந்தே தீரும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 20 சீட் வாங்கி நான்கு இடங்களில் வெற்றிபெற்றோம். இனி வரும் தேர்தலில் பாஜக 40 இடங்களுக்கு மேல் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது.

அமித்ஷா முன்னிலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தேன். அதிமுகவில் பெரிய பொறுப்பில் இருந்து வந்தாலும் கூட, பாஜகவில் எனக்கு எந்த பொறுப்பும் தரவில்லையே என்ற கோபம் உண்டு.

   ஆனால், இப்போது அந்த வருத்தங்கள் எதுவும் இல்லை. இன்று தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத, மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஆட்சியாக, ஊழல் மிகுந்த, பெண்களை மதிக்காத ஆட்சியாக உள்ளது. இந்த ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்" என்று தெரிவித்தார்.

  இதனைத் தொடர்ந்து அண்ணாமலையை நோக்கி, "அண்ணாமலைக்கு ஒரு வேண்டுகோள். அவர் இனி காலில் செருப்பு அணிய வேண்டும். 2026இல் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி; அண்ணாமலை இன்றே காலணி அணிந்து கொள்ளலாம் ஆட்சி மாற்றத்துக்கு நேற்றே அமித் ஷா, அடிக்கல் நாட்டியிருக்கிறார்" என்று தெரிவித்தார். நயினார் நாகேந்திரனின் கோரிக்கையை ஏற்று அண்ணாமலை காலணியை அணிந்தார்.